ராஜேஷ் ராவ்: சிந்துசமவெளி நாகரிகத்தின் வரிவடிவத்திற்கான ரோஸட்டா கல்.

Duration: 
00 hours 16 mins

அறிமுகம்:

குறுக்கெழுத்துப் புதிர்களுக்கெல்லாம் தாய்ப்புதிர் போன்ற, 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிந்துசமவெளியின் வரிவடிவத்தைப் புரிந்துகொள்ளும் பணியினால் ஈர்க்கப்படுள்ளார் ராஜேஷ் ராவ். டெட் 2011 கருத்தரங்கில், சிந்து சமவெளி நாகரிகத்தைப் புரிந்து கொள்வதற்கு முதற்படியாக, அதன் மொழியை எவ்வாறு அவர் கணினி தொழில் நுட்பத்தின் துணைகொண்டு அறிய முயல்கிறார் என்பதனை விளக்குகிறார்.

ஆங்கில உரையின் முழுமையான தமிழ் வடிவம்:

நான் ஒரு சிந்தனை பரிசோதனையோடு தொடங்க விரும்புகிறேன். இப்போது 4000 ஆண்டுகள் எதிர்காலத்தில் இருப்பதாக கற்பனை செய்யுங்கள். நமக்கு தெரிந்த இந்த நாகரிகம் முடிவுக்கு வந்து விட்டது. புத்தகங்கள் இல்லை,மின்னணு சாதனங்கள் இல்லை, ஃபேஸ்புக்கோ ட்விட்டரோ இல்லை. ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில மொழி பற்றிய அனைத்து அறிவும் அழிந்து விட்டது.இப்பொழுது, அகழ்வாராய்ச்சி செய்பவர்கள் நாம் வாழ்ந்த சிதைந்த நகரங்களில் ஒன்றை தோண்டி எடுத்துக் கொண்டு இருப்பதாக கற்பனை செய்யுங்கள். அவர்கள் என்னவெல்லாம் கண்டு எடுப்பார்கள்? ஒருவேளை சில செவ்வக பிளாஸ்டிக் துண்டுகள் அவற்றின் மீது வினோதமான குறியீடுகளோடு கண்டெடுக்கப்படலாம். ஒருவேளை சில வட்ட உலோகத் துண்டுகள், மற்றும் சில உருளைக் குடுவைகள், அவற்றின் மீது சில குறியீடுகளோடு கண்டெடுக்கப்படலாம். இவற்றினால் ஒருவேளை ஒரு அகழ்வாராய்ச்சியாளர் திடீரென பிரபலம் ஆகக்கூடும். அவர் தன் கண்டுபிடிப்பினால், வட அமெரிக்காவில் மலைக்குன்றுகளில் எங்கோ புதையுண்டிருந்த இதே போன்ற குறியீடு கொண்ட பொருட்களைக் 

கண்டெடுத்து புகழ் பெறலாம். இப்போது நம்மையே கேட்டுக் கொள்வோமே,அந்த புதைப்பொருட்கள் நம்மை பற்றி 4,000 ஆண்டுகள் பின் வரப்போகும் மக்களுக்கு என்ன சொல்ல முடியும்?

இது அனுமானக் கேள்வி அல்ல.... உண்மையில், இந்தக் கேள்வியைத்தான் நாம் எதிர்கொள்கிறோம் சிந்து சமவெளி நாகரிகத்தை பற்றி புரிந்துகொள்ள முயற்சிக்கும் பொழுதும். 4,000 ஆண்டுகள் தொன்மையான அந்த நாகரீகம் இதே கேள்வியை எழுப்புகிறது. ஏறத்தாழ சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தில் இருந்த எகிப்தியன் மற்றும் மெசப்படோனியன் நாகரிகங்கள் நன்கு அறியப்பட்டவை. ஆனால் உண்மையில் இந்த இரு நாகரிகங்களையும் விட சிந்துசமவெளி நாகரிகம் பெரியது. இது ஆக்கிரமித்து இருந்த பரப்புதோராயமாக ஒரு மில்லியன் சதுர கிலோ மீட்டர்கள். இது உள்ளடக்கிய பகுதிகள், இன்றைய பாக்கிஸ்தான் வடமேற்கு இந்தியா, ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் சில பகுதிகள். இது அவ்வளவு பரந்து விரிந்த நாகரிகம் என்பதால், ஆற்றல் மிக்க ஆட்சியாளர்கள், அரசர்கள் போன்றவர்களைப் பற்றிய தகவல்களையும், அவர்கள் புகழ்பாடும் பிரமாண்டமான நினைவுச் சின்னங்களையும் எதிர்பார்க்கப் படக்கூடும். உண்மையில்அகழ்வாராய்சியாளர்கள் இவற்றில் எதையுமே கண்டுபிடிக்கவில்லை.அவர்கள் இவற்றைப்போன்ற சிறிய பொருட்களைத்தான் கண்டு பிடித்தனர்.

உதாரணத்திற்கு, அந்த பொருட்களில் ஒன்றின் நகல் இது. ஆனால் இந்நபர் யார்? ஒரு மன்னரா? அல்லது கடவுளா? மதகுருவா? அல்லது சாதாரண மனிதனாக வாழ்ந்த நம்மைப் போன்றவரா? அது நமக்கு தெரியாது. ஆனால் சிந்து சமவெளி மக்கள் எழுத்துகள் நிறைந்த கலைப்பொருட்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். நெகிழியினால் (பிளாஸ்டிக்கினால்) செய்தவை அல்ல அவை. ஆனால் அவை கல்லில் செதுக்கப்பட்ட சின்னங்கள், வெண்கல தகடுகள், மண்பாண்டங்கள், அத்துடன் வியக்கும் வகையில் ஒரு பெரிய அறிவிப்பு பலகையுமாகும். இந்தப் பலகை நகரத்தின் வாசலில் கண்டெடுக்கப்பட்டது. அதில் எழுதியிருப்பது ஆலிவூட் என்ற வார்த்தையாகவோ அல்லது பாலிவூட் என்றோ கூட இருக்கலாம்.உண்மையில் நமக்குப் புரியாதது அந்தக் குறியீடுகளின் பொருள் என்ன என்பதே. காரணம் சிந்து வரிவடிவத்தின் பொருள் இன்னமும் புரிந்துகொள்ளப் படவில்லை. இக்குறியீடுகள் என்ன சொல்கின்றன என நமக்கு தெரியாது.

இக்குறியீடுகள் பெரும்பாலும் முத்திரைகளின் மீது காணப்படுகின்றன. நீங்கள் காணும் அது போன்ற முத்திரை ஒன்றில், சதுர வடிவ முத்திரையில் ஒற்றைக்கொம்பு மிருகத்தின் படம் இருக்கிறது. அது ஒரு உன்னதமான வேலைப்பாடு அமைந்த கலைப்பொருள். அது எவ்வளவு பெரிதாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்? இவ்வளவு பெரிது? அல்லது இவ்வளவு பெரிது? சரி, நான் உங்களிடம் காட்டுகின்றேன். இதோ அந்த முத்திரையின் ஒரு பிரதி. அதன் அளவு ஒன்றுக்கு ஒன்று அங்குலம்தான், மிகவும் சிறியது.எதற்காக இவற்றைப் பயன்படுத்தினார்கள்? களிமண் சீட்டுகளில் முத்திரை வைக்க இந்த அச்சு பயன்பட்டதாகத் தெரிகிறது. ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பப்படும் சரக்குகளில் அந்த சீட்டுகள் இணைக்கப்பட்டன. நீங்கள் பெறும் ஃபெட் எக்ஸ் பெட்டிகளின் மீது ஒட்டப்பட்டிருக்கும் தகவல் சீட்டு போன்றது இது. இவையும் அதுபோன்றே சரக்குகளின் மீது தகவல் சீட்டில் குறியிடப் பயன்பட்டுள்ளன. இந்தக் குறியீடுகள் எதைக் குறிக்கின்றன? இந்த எழுத்துக்களின் பொருள் என்ன? என நீங்கள் வியக்கலாம். பெரும்பாலும் அனுப்பியவர் பெயரைக் குறிக்கலாம்.அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பப்பட்ட சரக்கைப்பற்றிய தகவலாக இருக்கலாம் ...என்னவென்று நமக்கு தெரியாது. இந்த தகவல்களைப் பற்றி தெரிந்துகொள்ள முதலில் அந்த மொழியை புரிந்து கொள்ளவேண்டும்.

இந்த வரிவடிவங்களின் பொருளைப் புரிந்து கொள்வது அறிவார்ந்த புதிர் மட்டும் அல்ல, ஒரு கேள்வியும் கூட. அது ஆழமாக பின்னிப்பிணைந்திருப்பது தெற்காசியாவின் அரசியல் மற்றும் கலாசாரத்தின் வரலாற்றுடன். உண்மையில் இந்த வரிவடிவத்தைப் பற்றிய ஆராய்ச்சி விவாதம் மூன்று குழுகளுக்கிடையில் ஏற்பட்டுள்ளது. முதல் குழுவினர்ஆணித்தரமாக நம்புவது சிந்து வரிவடிவங்கள் மொழியைக் குறிப்பதல்ல என்பதை. அவர்கள் இந்தக் குறியீடுகள் சாலை விதிகளைக் குறிக்கும் குறியீடு போன்றவை அல்லது பட்டயங்களில் காணப்படும் முத்திரை போன்றவை எனக் கருதுகிறார்கள். இரண்டாம் குழுவினர், சிந்து குறியீடுகள் ஒரு இந்தோ-ஐரோப்பிய மொழி என்கின்றனர். இன்றைய இந்தியாவின் வரைப்படத்தை பார்த்தீர்கள் என்றால் வடஇந்தியாவின் பெரும்பாலான மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிப் பிரவில் அடங்கும். எனவே சிலர் சிந்து எழுத்துகள்சமஸ்கிருதம் போன்ற தொன்மையான இந்தோ-ஐரோப்பிய மொழியாக இருக்கலாம் என கருதுகின்றனர்.

இறுதியாக மற்றொரு குழுவினர் நம்புவது, சிந்து நாகரிக மக்கள் இன்று தென்இந்தியாவில் வசிக்கும் மக்களின் மூதாதையர்கள் என்பதை. இவர்கள் சிந்து வரிவடிவம் குறிக்கும் மொழி, தொன்மை வாய்ந்த திராவிட மொழி பிரிவினைச் சார்ந்ததாகவும், தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என நினைக்கிறார்கள். இக்கருத்தின் ஆதரவாளர்கள், வடக்கில் திராவிட மொழி பேசும் ஆஃப்கானிஸ்தானுக்கு அருகில் உள்ள சிறுகூட்டம் ஒன்றினை சான்றாக காட்டுகிறார்கள்.இந்தக்குழுவினர் சொல்வது, முன்னொரு காலத்தில் இந்தியா முழுவதும் திராவிட மொழிகள் பேசப்பட்டது, அதனால், சிந்து நாகரிகம் திராவிட நாகரிகமாக இருக்க வாய்ப்புள்ளது என நினைக்கிறார்கள்.

இவற்றில் எந்தக் கருத்து உண்மையாக இருக்கலாம்? நமக்கு தெரியாது, ஆனால் சிந்து வரிவடிவங்களைப் புரிந்து கொள்ள முடிந்தால் இக்கேள்விக்கு விடை கிடைக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்வதோ பெரிய சவாலாக உள்ளது. முதலில், ரோஸட்டா கல் கிடையாது. நான் மென்பொருளைக் குறிப்பிடவில்லை, நான் கூறுவது, பண்டைய கல்வெட்டுகளில்குறிப்பிட்டுள்ள புரியாத எழுத்துருவிற்கு பொருள் விளக்கம் கொடுக்கும் தெரிந்த எழுத்துருக்கள் கொண்ட 'குறிப்பு விளக்க கல்வெட்டுகள்' சிந்து எழுத்துக்களுக்கு கிடைக்கவில்லை என்பதை. மேலும், அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்றும் தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல்,பெரும்பாலான குறியீடுகள் குறுகிய வரிவடிவங்களை கொண்டவை. நான் உங்களிடம் காட்டியதுபோல அவை அச்சுகளில் காணப்படுகின்றன. அவை மிகவும் அளவில் சிறியது.

இதுபோன்ற பெருந்தடைகள் இருக்கும்பொழுது, நமக்கு வியப்பும் கவலையும் ஏற்படும். எப்பொழுதுதான் சிந்து வரிவடிவத்தை புரிந்துகொள்வது சாத்தியமாகும் என்று தோன்றும். என்னுடைய உரையில் தொடர்ந்து, நான் எவ்வாறு இந்தக் கவலைகளை நீக்கிவிட்டு சிந்து வரிவடிவத்தை புரிந்துகொள்ளும் சவாலை ஏற்றுக்கொண்டேன் என சொல்கிறேன். சிந்து வரிவடிவம் எப்பொழுதும் என் ஆர்வத்தை தூண்டிக் கொண்டிருந்தது. பள்ளிப் பாடங்களில் சிந்து வரிவடிவத்தை பற்றிப் படித்த பொழுது தோன்றிய ஆர்வம் இது. எனக்கு ஏன் இவ்வளவு ஆர்வம் வந்தது?இன்றுவரை புரிந்துகொள்ள முடியாத ஒரே பண்டைய மொழி என்பதுதான் காரணம். என் தொழில் என்னை கணினி நரம்பியல் அறிவியலாளராக ஆக்கியது. எனவே என்னுடைய அன்றாட வேலையில் நான் கணினியில் மூளையின் மாதிரிகளை உருவாக்குவேன். மூளை எப்படி அனுமானம் செய்கிறது? மூளை எப்படி முடிவு செய்கிறது? மூளை எப்படி கற்றுக்கொள்கிறது? போன்றவற்றை புரிந்து கொள்ள அவை உதவும்.

2007-ல் மீண்டும் என் வாழ்வில் சிந்து வரிவடிவம் தலையிட்டது. நான் இந்தியாவில் இருந்த பொழுது, எனக்கு ஒரு அருமையான வாய்ப்பு கிட்டியது.இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இந்திய அறிவியலாளர்களை சந்திக்க முடிந்தது. அவர்கள் கணினியில் மாதிரிகளை உருவாக்கி வரிவடிவத்தை ஆராய்ந்து கொண்டிடுதார்கள். அந்த சமயம், எனக்கு இந்தஅறிவியலாளர்களுடன் இணைந்து ஆய்வு செய்யும் வாய்ப்பு இருப்பதாக தோன்றியது. எனவே அவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டேன். நாங்கள் அறிந்து கொண்ட சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் அனைவரும் சேர்ந்து அவற்றை புரிந்து கொள்ள முயலுவோம். தயாராகி விட்டீர்களா?

படிக்கமுடியாத குறியீடு இருந்தால் நீங்கள் முதலில் எழுத்து எந்த பக்கமாக எழுதப்பட்டிருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும். இங்கு இரண்டு வரிகளுடன் சில சின்னங்களும் காணப்படுகின்றன. உங்களால் இந்த வரிகள்எழுதப்பட்டிருப்பது வலமிருந்து இடமா? அல்லது இடமிருந்து வலமா என்று சொல்ல முடியுமா? சில வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள். சரி, வலமிருந்து இடமாக என்று எவ்வளவு பேருக்கு தோன்றுகிறது? சரி, இடமிருந்து வலமாக என்று சொல்பவர்கள் எத்தனை பேர்? ஓ..50 க்கு 50. சரிஅதன் விடை இந்த வரிகளில் இடது புறம் பார்த்தீர்கள் என்றால் எழுத்துக்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு இருப்பது போல் இருக்கும். 4000 ஆண்டுகளுக்கு முன்பு இது வலதிலிருந்து இடமாக எழுதப்படும் போது இடப் பற்றாகுறை ஏற்பட்டிருக்கின்றது. எனவேதான் எழுத்துக்கள் ஒன்றுடன் ஒன்று இடித்துக்கொண்டிருக்கின்றன. ஒரு குறியீடு மேல் உள்ள வரிக்கு கீழேயும் எழுதப்பட்டுள்ளது. இது எழுத்துக்கள் எழுதப்பட்ட முறையை சொல்கிறது.பெரும்பாலும் இதை வலமிருந்து இடமாக எழுதியிருக்கின்றனர். இது முதலாவதாக நமக்கு கிடைத்த தகவல். எழுத்துக்கள் எழுதப்பட்டிருக்கும் திசையை கண்டுகொள்வது மொழியை படிப்பதில் அடிப்படையானது.அதனால் சிந்து நாகரிக எழுத்துக்கு என்று இந்த தனிப்பட்ட பண்பு உள்ளது தெரிகிறது.

இந்த மொழியின் வேறு என்ன பண்புகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்? மொழிகளுக்கு அமைப்பு உண்டு. நான் உங்களிடம் 'Q' என்று சொல்லி அடுத்து என்ன எழுத்து வரும் என்று கேட்டால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? பெரும்பாலோர் 'U' வரும் என்று சரியாக கூறுவீர்கள். மேலும் ஒரு எழுத்தை அனுமானம் செய்ய சொன்னால், என்ன எழுத்து வரும் என்று சொல்வீர்கள்? பல எழுத்துக்கள் வர இயலும், ..அது 'E ' ஆகவோ, 'I' அல்லது 'A ' ஆக கூட இருக்கலாம். ஆனால் நிச்சயமாக B,C,D ஆக இருக்க வாய்ப்பில்லை.சரிதானே ? சிந்து வரிவடிவத்திலும் இத்தகைய அமைப்பு காணப்படுகிறது. வைர வடிவம் கொண்ட இக்குறியீடு பல வரிகளின் தொடக்கமாக இருக்கிறது. வைர வடிவத்தை தொடர்ந்து பெரும்பாலும்மேற்கோள் குறி போன்ற வடிவம் வருகிறது. இந்த அமைப்பு, நாம் உதாரணத்திற்கு பார்த்த Q,U போன்ற அமைப்புதான். மேற்கோள் குறி வடிவத்தை தொடர்ந்து மீன் போன்ற வடிவம் அல்லது மற்ற பிற வடிவங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆனால் கீழே காணப்படும் இந்தவடிவங்கள் எழுதப்பட்டதே இல்லை. அத்துடன் மேலும் சில வடிவங்கள் வரிகளின் இறுதியில் மட்டுமே எழுதப்படுள்ளது. இந்த குடுவை வடிவ எழுத்து அவைகளில் ஒன்று. அத்துடன் இந்த வடிவம் எழுத்துக்களின் வரிசையில் அதிக முறை தோன்றுகிறது.

இந்த அமைப்பை பார்த்தபிறகு எங்களுக்கு கணினியை உபயோகப்படுத்திஇந்த அமைப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளும் எண்ணம் தோன்றியது.எனவே இந்த எழுத்துக்கள் கணினியில் உள்ளீடு செய்யப்பட்டன. கணினி, புள்ளியியல் அடிப்படையில் எந்த எழுத்துக்கள் சேர்ந்தார் போல வரும், எந்த எழுத்துக்கள் ஒன்றைத்தொடர்ந்து மற்றொன்று வரும் என்று கண்டு கொண்டது. கணினியின் அடிப்படை மாதிரி கொண்டு, அந்த மாதிரியையே சில புதிர் கேள்விகள் மூலம் பரிசோதிக்க முடியும். வரிகளில் சில எழுத்துக்களை நீக்கிவிட்டு கணினியிடம் அவை என்ன எழுத்துக்கள் என அநுமானிக்க சொல்லலாம். சில உதாரணங்கள், உங்களுக்கு இது பழமையான விளையாட்டான 'அதிஷ்ட சக்கர' விளையாட்டு போன்று தோன்றக்கூடும்.

இந்தப் புதிர் விளையாட்டு பரிசோதனையின் மூலம் கனிணி 75 விழுக்காடு சரியாக விடை கூறுவதை தெரிந்து கொண்டோம். தவறிய நேரங்களில்,இரண்டாவது அல்லது மூன்றாவது யூகம் சரியான பதிலாக இருந்தது.நடைமுறையில் இந்தக் குறிப்பிட்ட செயல்முறையினால் பயன் உண்டு.கிடைத்த சிந்து வரிவடிவங்கள் பல சிதைந்த நிலையில் உள்ளன. அதற்கு எடுத்துக்காட்டு இந்த வடிவம். கணினியின் துணை கொண்டு நாம் இதனை பூர்த்தி செய்து சரியான, பொருத்தமான வரிவைவடிவத்தை யூகிக்க முடியும்.இந்த எடுத்துக்காட்டில், நாங்கள் அநுமானித்த வரிவடிவம் இது. இந்த யூகிக்கும் முறை சிந்து நாகரிக மொழியை புரிந்துகொள்ள மேலும் பல தரவுகளை உருவாக்கி ஆராய்ச்சி செய்ய உதவும்.

கணினி மாதிரியினால் மேலும் ஒரு பயன் உள்ளது. ஒரு குரங்கு விசை பலகையில் தட்டச்சினால் ஒரு ஒழுங்குமுறையின்றி தாறுமாறாக இதுபோல தட்டச்சு செய்யும். எழுத்துக்கள் தாறுமாறாக பொருளின்றி இருக்கும். இது உயர்நிலை இயல்பாற்றல் ஆகும். தகவல் மற்றும் இயற்பியலில் 'இயல்பாற்றல்' ஒரு கோட்பாடாக கூறப்படும். ஆனால் உண்மையிலேயே அவை சீரற்ற எழுத்துக்களாகும். உங்களில் எத்தனைப் பேர் விசைப்பலகையில் காஃப்பியை சிந்தியுள்ளீர்கள்? நமக்கு விசைபலகையில் எழுத்துவிசைகள் ஒட்டிக்கொள்ளும் சிக்கல் பற்றி புரியும். அதனால் ஒரே எழுத்து தொடர்ந்து மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும். இதனை கீழ் நிலை இயல்பாற்றல் எனக் கூறலாம். ஏனெனில் இதில் வேறுபாடுகள் குறைவு. ஒரு மொழியின் இயல்பாற்றல் இடைப்பட்ட நிலையில் இருக்கும்.ஒரு மொழியின் இயல்பு கடினமானதும் அல்ல, சீரற்றதும் அல்ல. சிந்து வரிவடிவத்தின் முறை எப்படி உள்ளது? இந்த வரைபடம், பல வரிசைகளின் இயல்பாற்றலைக் காண்பிக்கிறது. மேலே உள்ள கோடு சீரற்ற எழுத்துக்களைக் குறிக்கிறது. அதாவது தாறுமாறாக எழுதப்பட்ட எழுத்துக்களைக் குறிக்கிறது. ஆர்வத்தை தூண்டும் மற்ற வரிசைகளில்,மனித மரபணு மற்றும் இசைக்கருவியில் தோன்றும் இசை வடிவமும் உண்டு. இவை இரண்டும் மிகவும் இணங்கும் இயல்பாற்றல் உடையவை.அதனால் அவை மேல்புறம் உள்ள கோட்டின் அருகே உள்ளது. வரைபடத்தின் அடிப்புறம், குறைந்த இணங்கும் தன்மையுடன் கீழ்நிலை இயல்பாற்றல் கொண்ட ஒரே எழுத்து வரிசை இடம் பெற்றுள்ளது. மற்றும் அந்த வரிசையில் இடம் பெறுவது ஒரு கணினி நிரல். அது ஃபோர்ட்ரான் கணினி மொழியால் உருவாக்கப்பட்டது. ஃபோர்ட்ரான் கடுமையான விதிகளை அடிப்படையாகக் கொண்டது. மொழிகளின் எழுத்து வரி வடிவங்களின் இயல்பாற்றல் இடைப்பட்ட நிலையில் உள்ளது.

சிந்து வரிவடிவங்களின் நிலை என்ன? சிந்து வரிவடிவங்கள்மொழிகளுக்குரிய வரம்பில் இடம் பெற்றுள்ளது. இந்த முடிவினை முதலில் வெளியிட்டப்போது அது சர்ச்சைகுள்ளான செய்தியாகியது. சிலர் கூப்பாடு போட்டார்கள். இவ்வாறு எதிர்த்தவர்கள் சிந்து வரிவடிவம் மொழியை பிரதிபலிக்கவில்லை என்று நம்பியவர்கள். சில வெறுப்பை காட்டும் மின்அஞ்சல்கள் கூட எனக்கு வந்தன. எனது மாணவர்கள் என்னை பாதுகாப்பு பெற சொல்லி வலியுறுத்தினார்கள். யாருக்குதான் தெரியும் குறியீடுகளின் பொருள்உணர்வது இவ்வளவு ஆபத்தான பணி என்று? இந்த முடிவுகள் அறிவிப்பது என்ன? சிந்து வரிவடிவங்கள் ஒரு மொழியின் தன்மையை கொண்டிருப்பதாக தெரிவிக்கின்றது பொதுவாக பழமொழிகள் குறிப்பது போல, இது ஒரு மொழியின் அமைப்பை ஒத்திருந்தால் மொழியின் வரிவடிவம் போலவே செயல்படுமானால் சிந்து வரிவடிவங்கள் ஒருமொழியின் வரிவடிவங்களே. மற்ற பிற ஆதாரங்களில், இந்த வரிவடிவங்கள் உண்மையில் ஒரு மொழியின் குறியீடு உணர்த்துபவை எவை?

மொழியியல் வரிவடிவங்கள் பலமொழிகளுக்கு அடிப்படையானதாக இருக்கக்கூடும். உதாரணத்திற்கு, ஆங்கில மொழியில் எழுதப்பட்ட வாக்கியம் டச்சு மொழியிலும் அதே எழுத்துக்களையும் இலக்கங்களையும் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. உங்களுக்கு டச்சு மொழி தெரியாமல் ஆங்கிலம் மட்டும் தெரிந்திருக்குமானால், நான் டச்சு மொழியில் சில வார்த்தைகளை தந்தால், இந்த வார்த்தைகள் ஆங்கில வார்த்தைகள் போலில்லை, ஏதோ தவறு, இவை ஆங்கில வார்த்தைகளாக இருக்க வாய்ப்பில்லை என்பீர்கள்.சிந்து வரிவடிவங்களை புரிந்து கொள்ளும்போழுதும் அது போன்ற சிக்கல்தான். கணினி தேர்ந்தெடுத்த பல எழுத்துகளில் இரண்டு இங்கே காண்பிக்கப்பட்டுள்ளது. இவை வழக்கத்திற்கு மாறான அமைப்பை கொண்டிருக்கின்றது. எடுத்துக்காட்டாக, முதல் எழுத்தை எடுத்துக்கொள்வோம். இங்கு குடுவை போன்ற வடிவம் அடுத்தடுத்து வருகிறது. இந்த வடிவம் சிந்து வரிவடிவத்தில் அதிகம் இடம்பெறும் வடிவம்.ஆனால் இந்த வரிகளில் மட்டுமே அடுத்தடுத்து வருகிறது.

அதன் காரணம் என்ன? நாங்கள் இந்த குறிப்பிட்ட எழுத்துகள் எந்த இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என ஆராய்ந்தோம். இது கண்டெடுக்கப்பட்ட இடம்சிந்து சமவெளியில் இருந்து வெகுதூரத்தில் உள்ளது. இன்றைய ஈரான் ஈராக் இருக்கும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. அந்தப் பகுதியில் கண்டெடுக்க காரணம் என்ன? நான் உங்களிடம் தெரிவிக்காதது என்னவென்றால்சிந்துசமவெளி மக்கள் மிகவும் துணிச்சல் நிறைந்தவர்கள். அவர்கள் மிக தொலைதூரத்தில் வாழ்ந்தவர்களுடனும் வர்த்தகம் செய்து வந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கடல் பயணம் செய்து இன்றைய ஈராக், மெசபொட்டாமியா வரை சென்றிருக்கிறார்கள். அதனால் என்ன நிகழ்ந்திருக்கிறது என்றால் சிந்து வணிகர்கள் அந்நிய மொழியை எழுத தங்கள் எழுத்தையே பயன்படுத்தி இருக்கிறார்கள். இது நாம் பார்த்த ஆங்கில - டச்சு உதாரணத்தைப் போன்றதுதான். இது அந்தவரிகளில் தோன்றிய விநோதாமான அமைப்பை விளக்கும். அதனால் இந்த சிந்து வரிவடிவ அமைப்பு சிந்துசமவெளியில் கண்டெடுக்கப்பட்டவைகளை விட மாறுபட்டுள்ளது. இதிலிருந்து, அதே சிந்து வரிவடிவம் வேறு மொழிகளை எழுதவும் பயன்படுத்தப் பட்டிருப்பது தெரிகிறது. இதுவரை கிடைத்த முடிவுகள் குறிப்பது என்னவென்றால் சிந்து வரிவடிவங்கள் பெரும்பாலும் ஒரு மொழியின் எழுத்துக்களாக இருக்கும் என்பதைத்தான்.

அதை ஒரு மொழி என்று சொல்வோமானால், அதனைஎவ்வாறு படிப்பது?நம்முடைய அடுத்த சவால் அதுதான். இதில் உள்ள பெரும்பாலான குறியீடுகளின் வடிவங்கள் மனிதர்கள், பூச்சிகள், மீன்கள் அல்லது பறவைகள் போன்ற வடிவில் உள்ளன. பெரும்பாலான பழமையான வரிவடிவங்கள்ஓவிய ஒலியெழுத்து புதிர் போன்றது. வார்த்தைகள் படங்களாக விளக்கப்பட்டிருக்கும். எடுத்துகாட்டுக்காக இதோ 'பிலீஃப்' என்ற வார்த்தை...இதனை நீங்கள் படமாக காட்டமுடியுமா ? உங்களுக்கு சில வினாடிகள் கொடுக்கின்றேன். கிடைத்ததா? சரி, அருமை. இதோ என் தீர்வு. நீங்கள் தேனீயின் படத்தை தொடர்ந்து இலையின் படத்தை காட்டலாம். அதைப் உச்சரித்தால் 'பிலீஃப்' என்ற ஒலி கிடைக்குமல்லவா? வேறு தீர்வுகளும் இருக்கக்கூடும். சிந்து குறியீடுகளைப் பொறுத்தவரை தோன்றுவதோ நேர்மாறான சிக்கல், இங்கோ படங்களின் ஓசை என்னவென்று அறிந்தால்தான் இந்த வரிகளின் அர்த்தம் புரியும். எனவே இது ஒரு குறுக்கெழுத்து புதிரைப் போன்றது. ஆனால் இதுதான் குறுக்கெழுத்து புதிர்களுக்கெல்லாம் தாய் போன்றது. இதற்கு தீர்வுகண்டால் கிடைக்கும் பரிசோ பெரியது.

எனது நண்பர்களான ஐராவதம் மகாதேவனும் அஸ்கோ பார்போலாவும் இந்த சிக்கலுகான தீர்வை நோக்கி முன்னேறியுள்ளனர். பார்போலாவின் பணியில் இருந்து ஒரு எடுத்துகாட்டை காட்ட விரும்புகிறேன். ஒரு சிறிய வரியிது.இதில் செங்குத்தான ஏழு கோடுகளைத் தொடர்ந்து மீனைப் போன்ற சின்னம் உள்ளது. இந்த முத்திரை சரக்குகளின் களிமண் சீட்டுகளில் அச்சு வைக்கபயன்படுத்தப் பட்டன. அதனால், ஒரு சில சீட்டுகளாவது வணிகர்களின் பெயர்களைக் குறிக்க வாய்ப்புள்ளது. இந்திய பண்பாட்டின் ஒரு பழமையான மரபு ஜாதகத்தின் அடிப்படையில், பிறக்கும் நேரத்தில் வானில் உள்ளகோள்களின் நிலையை பொறுத்து பெயர் வைப்பது. திராவிட மொழிகளில்மீன் என்ற சொல்லின் ஓசை விண்மீன் என்ற அர்த்தத்திலும் வரும். அத்துடன் ஏழு நட்சத்திரம் என்பது 'ஏழு மீன்' என்பதாக குறிக்கப் பட்டிருக்கலாம். அது திராவிட மொழிகளில் பெருங்கரடி நட்சத்திர கூட்டத்தினைக் குறிக்கும்.அதுபோலவே ஆறு நட்சத்திரங்களின் தொடரினை ஆறுமீன் என்று மொழியாக்கம் செய்யலாம். பழந்திராவிட மொழியில் அது ஆறு நட்சதிரங்களையுடைய கார்த்திகை நட்சத்திர கூட்டத்தைக் குறிக்கும்.இறுதியாக, மற்ற வடிவ சேர்க்கைகளில் மீன் வடிவத்தின் மேல் கூரை போன்ற வடிவம் ஒன்று உள்ளது. இதனை 'மெய் மீன்' என்று மொழியாக்கம் செய்யலாம். பழந்திராவிட மொழியில் சனி கோளிற்கு அந்தப் பெயர் உண்டு.மிகவும் உற்சாகமூட்டும் தகவல் இது. ஏதோ கொஞ்சம் புரிய ஆரம்பிப்பது போலுள்ளது.

ஆனால் நம்மால் இதனை உறுதி செய்ய முடியுமா, இந்த முத்திரைகள் திராவிட பெயர்களை, அதிலும் கோள்களையும் விண்மீன்களையும் அடிப்படையிலான பெயர்களைக் குறிக்கிறது என்பதை. இன்னமும் இல்லை.நமக்கு இதை உறுதி படுத்த, இந்த குறிப்பிட்ட வரிகளைப் படித்ததின் மூலம் வாய்ப்பில்லை. ஆனால் இதுபோன்று பலவரிகளை ஆராய்ந்தால் புரியக்கூடும். நீண்ட வரிகளில் எழுதப் பட்டிருப்பது சரியாக இருப்பதாகத் தோன்ற ஆரம்பித்தால் அப்பொழுதுதான் நாம் சரியான பாதையில் செல்வதாகத் தெரியும். இன்று நம்மால் 'டெட்' என்ற வார்த்தையைஎகிப்தியர்களின் 'ஹெய்ரோகிலிஃபிக்ஸ்' மற்றும் 'கியுனிஃபார்ம்' எழுத்துகளில் எழுத முடியும். காரணம், இந்த வரிவடிவ எழுத்துக்களை நாம் புரிந்து கொண்டுவிட்டோம். 19-ஆம் நூற்றாண்டில் இந்த இரண்டு வரிவடிவ எழுத்துக்களையும் புரிந்து கொண்டதால் எகிப்திய நாகரிகத்தில் வாழ்ந்தவர்கள் மீண்டும் நம்முடன் நேரிடையாக பேசுகிறார்கள். மாயன்கள் 20 ம் நூற்றாண்டில் நம்மோடு பேச ஆரம்பித்தார்கள். ஆனால் இந்த சிந்து நாகரிகம் மட்டும் அமைதியாகவே இருக்கிறது.

அதைப்பற்றிய கவலை நமக்கெதற்கு? சிந்து நாகரிகம் என்பதுதென்இந்தியர்களுக்கு மட்டுமோ அல்லது வடஇந்தியர்களுக்கு மட்டுமோஅல்லது பாகிஸ்தானியர்களுக்கு மட்டுமோ உரியது அல்ல; இது நம் எல்லோருக்கும் சொந்தமானது. இவர்கள் நம் முன்னோர்கள் உங்களுடைய மற்றும் என்னுடைய முன்னோர்கள். அவர்கள் அமைதியாக்கப்பட்டது,வரலாற்றில் நிகழ்ந்த எதிர்பாராத ஒரு விபத்தினால். நாம் அந்த வரிவடிவத்தின் இரகசியத்தை உடைத்து விட்டால் அவர்களை நம்மோடு மீண்டும் பேச வைக்க முடியும். அவர்கள் நம்மிடம் என்ன சொல்லுவார்கள்?நாம் அவர்களைப் பற்றி அல்லது நம்மைப் பற்றி என்ன தெரிந்து கொண்டிருப்போம்? கண்டுபிடிக்க என்னால் காத்திருக்க முடியாது.

நன்றி.

(கைதட்டல்)

 
 

 

18487 registered users
7228 resources