கிரண் பீர் சேடி பொறுப்பெடுத்துக் கொள்ள சிறுவர்களை பயிற்றுவிக்கிறார்

Duration: 
00 hours 10 mins

தொற்றுதல் ஒரு நல்ல வார்த்தை. H1N1 கிருமி பரவிய சமயத்திலும் கூட அவ்வார்த்தை எனக்கு பிடித்திருந்தது. சிரிப்பு தொற்றக் கூடியதுஅதீத ஆர்வம் தொற்றக்கூடியது. உத்வேகம் தொற்றக் கூடியது. சில மேன்மையான விஷயங்களை பற்றி மேன்மையான மக்கள் பேசுவதை இங்கே கேட்டோம்.நான் கருதுவதாவது, அவர்கள் அனைவருமே நம்மை கவர்வது ஏனென்றால்அவர்கள் அனைவருமே பாதிக்கப்பட்டிருந்தது "என்னால் முடியும்" என்ற கிருமியால்.

அவர்கள் மட்டும் ஏன்? இது தான் இப்போது கேள்வி. 

ஒரு பில்லியன் மக்களுக்கு மேல் வாழும் இந்நாட்டில் ஒரு சிலர் மட்டும் ஏன்? அதிர்ஷ்டமா? வாய்ப்பா? நாம் எல்லோரும் திட்டவட்டமாக, விழிப்புணர்வுடன் பாதிப்படைய முடியாதா? 

ஆகஅடுத்த எட்டு நிமிடங்களில் என் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 17 வயதில் எனக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டது. நான் வடிவமைப்பு கல்லூரியில் மாணவியாக இருந்த போது நான் சந்தித்த சில பெரியோர்கள் என் சிந்தனைகள் மீது நம்பிக்கை கொண்டு, சவாலான பயிற்சிகள் பல எனக்களித்தனர்என்னுடன் அமர்ந்து தேனீர் அருந்தியபடியே கற்பித்தனர். அந்த அனுபவங்கள் எவ்வளவு அருமையானவை என உணர்ந்தேன், அந்த அருமையான உணர்ச்சி தொற்றக்கூடியது என்றும் உணர்ந்தேன். ஏழு வயதிலேயே அந்த பாதிப்பு எனக்கு ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் உணர்ந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன் ரிவர்சைடு பள்ளியை நான் தொடங்கிய போது அது "என்னால் முடியும்" என்ற கிருமியால் மனங்ளை பாதிப்படையச் செய்யும் வழிமுறை ஒன்றை வடிவமைக்கும் சோதனைக் கூடமாக ஆனது.மேலும் எனக்கு புரிந்தது என்னவென்றால், கல்வியை தினசரி வாழ்க்கையுடன் பொருத்திப் பார்க்கும் போது, பள்ளிக்கும் தினசரி வாழ்க்கைக்கும் ஆன இடைவெளியை குறைக்கும் போது, சிறுவர்கள் தம்மை உணரும் பாதையில் பயணிக்கிறார்கள், மாற்றங்களை உணர்ந்து கொள்கிறார்கள், வாய்ப்பளித்தால் மாற்றம் அடைகிறார்கள்,பொறுப்பளித்தால் மாற்றத்தை நிகழ்த்துகிறார்கள். இது சிறுவர்களின் வாழ்க்கை வளத்தை நேரடியாக பெருக்குகிறது. சிறுவர்களின் திறமைகளும் வளர்கிறது, மற்றவர்களை சார்ந்திருப்பதும் குறைகிறது. ஆனால் இதெல்லாம் பொதுவான அறிவு.

ஆக, ஒரு சிறிய கண்ணோட்டத்தை காட்டுகிறேன் ரிவர்சைடு பள்ளியில் தினசரி பயிற்சி எப்படி என்று. ஒரு சிறிய தகவல்: குழந்தைத் தொழிலாளர் முறை பற்றி என் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் கற்ற போது அவர்களை அகர்பத்தி உருட்டச் சொன்னோம், எட்டு மணி நேரத்திற்கு. குழந்தைத் தொழிலாளர்களின் நிலையை அவர்கள் அனுபவித்து உணரவே இது. இதனால் முழுவதாக மாற்றமடையும் அவர்களின் பயணத்தைக் காண்பீர்கள்,வெளியே சென்று உலகையே மாற்றும் அவர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையை காண்பீர்கள். (இசை)

இதோ உருட்டுகிறார்கள். இரண்டு மணி நேரத்தில் களைத்து போகிறார்கள்,மாற்றம் நிகழ்கிறது. மாற்றம் நிகழ்ந்தவுடன், அவர்கள் ஊருக்குள் சென்று அனைவருக்கும் உணர்த்துகிறார்கள் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று. 

ராகவை பாருங்கள், அந்த ஒரு நொடியில் அவன் முகம் மாற்றமடைவதை. ஏனென்றால் அம்மனிதரின் மனத்தை தான் மாற்றிவிட்டதை அவனால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இதெல்லாம் பள்ளி அறையினுள் சாத்தியப்படாது. ராகவ் இவ்வாறு உணர்ந்ததும், "என் ஆசிரியர் செய்யச் சொன்னார்," என்ற அவனது மனநிலை "நான் செய்கிறேன்" என மாறுகிறது. இது தான் "என்னால் முடியும்" மனநிலை. மேலும் இந்த வழிமுறைக்கு சக்தியூட்டி அதை பேணி வளர்க்க முடியும்.

ஆனால் சில மாணவர்களின் பெற்றோர்கள் சொன்னார்கள், "பிள்ளைகளை நல்ல மனிதர்களாக வளர்ப்பதெல்லாம் சரிதான், ஆனால் கணக்கு, அறிவியல், ஆங்கிலம் இதெல்லாம் என்னாவது? மதிப்பெண்களும் எமக்கு தேவை." 

ஆனால் அதுவும் தான் சாத்தியப்பட்டது. புள்ளிவிவரங்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. சிறுவர்களுக்கு பொறுப்பளிக்கும் போது, நன்றாக மட்டுமில்லை, மிக நன்றாகவே படிக்கிறார்கள், இந்த தேசிய அளவிலான புள்ளி விபரங்களில் நீங்கள் காண்பது போல, 2,000க்கும் மேலான பள்ளிகளை இது கவர்கிறது. 

ரிவர்சைடு மாணவர்கள் இந்தியாவின் முதல் 10 பள்ளிகளின் மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுகிறார்கள், கணக்கு, ஆங்கிலம், அறிவியல் போன்ற பாடங்களிலும்.

ஆக, இந்த வழிமுறை சாத்தியப்பட்டது. இதை ரிவர்சைடு பள்ளிக்கு வெளியிலும் கொண்டு செல்லும் தருணம். 

ஆகஸ்ட் 15, 2007, சுதந்திர தினத்தன்று, ரிவர்சைடு சிறுவர்கள் அகமதாபாத் நகரத்தை பாதிக்கப் புறப்பட்டார்கள். இப்போது ரிவர்சைடு பள்ளிச் சிறுவர்களுக்கு மட்டும் அல்ல,எல்லா சிறுவர்களுக்கும் பங்குண்டு. அதனால் தயக்கத்தை எல்லாம் தூக்கி எறிந்தோம். காவல்துறை, நகராட்சி அலுவலகம், பத்திரிகையாளர்கள்,வணிகர்கள், இவர்களிடமெல்லாம் சென்று இவ்வாறு சொன்னோம், "எப்போது நீங்கள் விழிக்கப்போகிறீர்கள்? எப்போது ஒவ்வொரு சிறுவர்களுக்குள் உள்ள திறமையை காணப்போகிறீர்கள்? சிறுவர்களுக்கு உரிய இடத்தை எப்போது கொடுக்கப் போகிறீர்கள்? பொதுவாக, எப்போது சிறுவர்களுக்காக உங்கள் உள்ளங்களை திறக்கப்போகிறீர்கள்?"

இதற்கு நகரவாசிகளின் பதில் எப்படி இருந்தது? 

2007ம் வருடம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும், பரபரப்பான நகர வீதிகள் சிறுவர்களுக்காக ஒதுக்கப் படுகிறது. அவை சிறுவர்களின் விளையாட்டுத் திடலாக மாறுகிறது. 

இதோ, ஊரே திரண்டு "உன்னால் முடியும்" என சிறுவர்களுக்குச் சொல்லும் காட்சி.அகமதாபாத்தில் நடந்த பாதிப்பை காண்போம். (காட்சிப்படம்) 

நகரத்தின் பரபரப்பான வீதிகளும் மூடப்பட்டன. போக்குவரத்து காவல் துறையும் நகராட்சியும் நமக்கு உதவுகின்றது. வீதிகள் சிறுவர்களால் ஆக்கிரமிக்கப் படுகிறது. அவர்கள் சறுக்கி விளையாடுகிறார்கள். வீதி நாடகங்கள் நடத்துகிறார்கள். ஆட்டம் போடுகிறார்கள், சிறுவர்களுக்கு எல்லா சுதந்திரமும் இங்குண்டு. (இசை)

அதுல் கர்வால்: அப்ரோச் என்ற நிறுவனம் சிறுவர்களின் மேன்மைக்காக செயல்படுகிறது. மேலும் நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு நாங்கள் இதை கொண்டு செல்லப் போகிறோம். (இசை)

கிரண் பீர் சேடி: இப்படி நகரம் அவர்களுக்காகவே நேரம் அளிக்கிறது.சிறுவர்கள் எளிதாக சாலையை கடக்கும் வசதி கொண்ட முதல் நகரமாக அகமதாபாத் ஆனது.

கீத் சேடி: ஊரார் சிறுவர்களுக்கு நன்மை செய்யும் போது பின்னாட்களில் சிறுவர்களும் ஊருக்கு நன்மை செய்வார்கள். (இசை)

கிரண்: இதனாலேயே அகமதாபாத் இந்தியாவின் முதல் சிறுவர்க்கு எளிய நகரம் என்று அழைக்கப்படுகிறது.

இப்போது இந்த முறை உங்களுக்கு புரிகிறது. முதலில் 200 ரிவர்சைடு சிறுவர்கள். பிறகு 30,000 அகமதாபாத் சிறுவர்கள், இது மேலும் வளர்கிறது.இந்தியாவையே பாதிக்கும் சமயம் வந்தது. 

ஆக, அன்று ஆகஸ்டு 15,மீண்டும், சுதந்திர தினம், 2009ம் வருடம், இதே வழிமுறையால் ஊக்கம் கொண்டு, 100,000 சிறுவர்களை "என்னால் முடியும்," என்று சொல்ல வைத்தோம். 

எப்படி? ஒரு எளிமையான செய்முறை கையேடு ஒன்றை உருவாக்கினோம், அதை எட்டு மொழிகளில் மொழிபெயர்த்தோம், அப்படி 32,000 பள்ளிகளை சென்றடைந்தோம். சிறுவர்களுக்கு மிக எளிமையான சவாலைக் கொடுத்தோம். அவர்களை சங்கடப் படுத்தும் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு, ஒரு வாரத்திற்குள், ஒரு பில்லியன் மக்களின் வாழ்வை மாற்றச் சொன்னோம்.

அவர்கள் மாற்றினார்கள். மாற்றங்கள் பற்றிய செய்திகள் இந்திய முழுவதிலிருந்தும் வந்து கொட்டியது, கிழக்கில் உள்ள நாகாலாந்து முதல்,மேற்கில் உள்ள ஜுன்ஜுனு வரை, வடக்கில் உள்ள சிக்கிம் முதல், தெற்கில் கிருஷ்ணகிரி வரை. பல்வேறு விதமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சிறுவர்கள் வடிவமைத்தார்கள். 

தனிமை பிரச்சினை, சாலையில் உள்ள ஓட்டைகளை மூடுவது, குடி பிரச்சினை, மேலும் 32 சிறுவர்கள் 16 குழந்தை திருமணங்களை நிறுத்தினார்கள் ராஜஸ்தானில். இது மிகவும் அற்புதமான விஷயம் அல்லவா? இதிலிருந்து புரிவது என்னவென்றால், பெரியவர்கள் சிறுவர்களை நம்பி அவர்களிடம் "உன்னால் முடியும்" என்றால் அவர்கள் செய்தே காட்டுவார்கள். 

இந்தியாவில் நடந்த பாதிப்பு. இது ராஜஸ்தானில், ஒரு கிராமத்தில்.

சிறுவன்: படிப்பறிவில்லாத எங்கள் பெற்றோருக்கு நாங்கள் எழுத படிக்க கற்பிப்போம். 

கிரண்: முதன் முறையாக கிராமப் பள்ளியில் கேள்வியுறாத திரளணி, வீதி நாடகம், படிப்பறிவின் முக்கியத்துவத்தை அவர்கள் பெற்றோர்களுக்கு உணர்த்துவதற்காக. அவர்களின் பெற்றோர்கள் என்ன சொல்கிறார்கள் பார்ப்போம்.

மனிதர்: இந்நிகழ்ச்சி அருமை. எங்கள் பிள்ளைகள் எங்களுக்கே எழுத படிக்க கற்பித்தது அருமை.

பெண்: என் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை நடத்தியதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. இனிமேல் என் மாணவர்களின் திறமையை நான் சந்தேகிக்கவே மாட்டேன். பார்த்தீர்களா? அவர்கள் செய்து காட்டினார்கள்.

கிரண்: ஹைதராபாத் நகரத்தின் உள்ளே ஒரு பள்ளி. 

சிறுமி: 581. இது 581ம் எண் வீடு ...

555ம் எண் வீட்டிலிருந்து நாம் சேகரிக்க வேண்டும்.

கிரண்: ஹைதராபாத் சிறுவர்களும் சிறுமிகளும் ஊரை மாற்றுகிறார்கள்,கடினமான காரியம் தான், ஆனால் செய்து காட்டினார்கள்.

பெண்: இவ்வளவு சின்ன வயதிலும் எவ்வளவு நல்ல காரியம் செய்கிறார்கள்.முதலில் அவர்கள் சமூகத்தை சுத்தம் செய்தார்கள், பின்னர் ஹைதராபாத்தை, விரைவில் இந்தியாவையே.

பெண்: இது நான் சற்றும் எதிர்பார்க்காதது, அவர்களுக்குள் தான் எவ்வளவு ஆற்றல்.

சிறுமி: திருவாளரே, திருமதியே, நன்றி. ஏலத்திற்காக சில அற்புதமான ஓவியங்களை வைத்துள்ளோம், எல்லாம் நல்ல காரியத்திற்காகவே, நீங்கள் கொடுக்கும் பணம் செவிப்புலன் உதவிச் சாதனம் வாங்க பயன்படும். நீங்கள் தயாரா?

கூட்டம்: தயார்!

சிறுமி: நீங்கள் தயாரா?

கூட்டம்: ஆம்!

சிறுமி: நீங்கள் தயாரா?

கூட்டம்: ஆம்!

கிரண்: கருணை என்பது இப்படித்தான் தொடங்குகிறது.

வீதி நாடகங்கள்ஏலங்கள்கோரிக்கை மனுக்கள். அதாவது, அவர்கள் பலரின் வாழ்வையே மாற்றுகிறார்கள். இது அற்புதமான விஷயம். ஆகவே, நாம் எப்படித்தான் இந்த பாதிப்பிலிருந்து தப்பிப்பது? இந்த அதீத ஆர்வம், இந்த சக்தி, இந்த கிளர்ச்சி, இதிலிருந்து நாம் எப்படி தப்பிப்பது? தப்பிக்க முடியாது என்று எனக்கு தெரியும். 

மாபெரும் மாற்றம் ஒன்றை நிகழ்த்திய காந்திஜியைப் பற்றிக் கூறி பேச்சை முடித்துக் கொள்கிறேன் 70 வருடங்களுக்கு முன், இந்த ஒரே மனிதர் ஒரு பரந்த தேசத்தையே பாதித்தார் "நம்மால் முடியும்" என்ற சக்தியை மட்டும் கொண்டு.

ஆகவே, இன்று யார் இதை நிகழ்த்தப் போகிறார்கள்? 100,000 சிறுவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை இந்தியாவின் 200 மில்லியன் சிறுவர்களுக்கும் யார் கொண்டு செல்வார்கள்? "இந்திய மக்களாகிய நாம்," என்று தானே இந்திய அரசியலமைப்பு முகப்புரை தொடங்குகிறது? 

ஆகவே, நாம் இல்லையேல், வேறு யார்? 

இப்போது இல்லையேல், வேறு எப்போது? 

நான் சொன்ன மாதிரி, தொற்றுதல் ஒரு நல்ல வார்த்தை. 

நன்றி. (கைதட்டல்)

இந்த  தமிழ் உரை வீடியோ திரையில் பதிவு செய்துள்ள பதிப்பபை கீழே உள்ள மின் இணைப்பு கொண்ட எழுத்தைக் கிளிக் செய்து காணவும்: 

தொற்றுதல்

 

 

 

18487 registered users
7228 resources