இயற்கையை நேசிப்போம்

Resource Info

Basic Information

இயற்கைச் சூழ்நிலையில் நடந்து செல்வது மற்றும் முகாம் அமைத்துத் தங்குதல் ஆகியவைகள் இயற்கையை அறிவதற்கான மாணவர்களுக்குக் கிடைக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும். இந்த மாதிரியான சுற்றுப்பயணங்களுக்கு அதிக நேரமும், பணமும் தேவைப்படுவதால் இவைகள் அரிய சந்தர்ப்பங்களாக இருக்கின்றன. எனவே தொலைதூர இடத்திற்குச் செல்லாமல் இங்கே நம் அருகிலேயே அமைந்திருக்கும் இயற்கையை கவனித்து கற்றுக் கொள்ள நாம் முயற்சிப்போம்.  

 

Lesson plan Details

Duration: 
03 hours 00 mins
முன்னுரை: 

அறிவியல் பாடத்தின் பண்பு என்னவெனில் நேரடியான அல்லது மறைமுகமான கவனிப்பு மூலம் தகவலகளைச் சேகரித்து அவைகளைப் பல்வேறு முறைகளில் பரிசோதனை செய்து பார்ப்பது ஆகும். குறிப்பிட்ட கால அளவுக்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள் இருப்பதால் அவர்கள் அறிவுறுத்தும் பாணியைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஏனென்றால், இந்த முறையில் ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்க தங்களைத் தயார் செய்வதற்கும், வழங்குவதற்கும் அதிக நேரம் ஆவதில்லை. இந்த வழி முறையில், குழந்தைகள் `அறிவை’ப் பெறுகிறார்களே தவிர `செய்முறைப் பயன்பாட்டை’ அவர்கள் கற்றுக் கொள்வதில்லை.  ` உண்மை சார்ந்த’ அனுபவத்துடன் `கற்றலை’யும் இணைத்துப் பார்க்கும் முயற்சிதான் இந்தப் பாடத்திட்டம்.   

Objective: 

நோக்கங்களும், குறிக்கோள்களும்

 1. குழந்தைகளை நெருங்கிச் சுற்றியிருக்கும் சுற்றுப்புறத்துடன் அவர்களுக்கு ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள உதவுவது
 2. மிகவும் நெருக்கமாக குழந்தைகள் கவனிப்பதற்கு உதவி, அதன் மூலம் அவர்களுடைய புரிதலை அதிகரிக்கச் செய்வது.
 3. பிரிவுகள் மற்றும் வகைப்படுத்தலை குழந்தைகள் கற்றுக் கொள்வது 

 

Steps: 

நம்மை சுற்றியிருக்கும் இயற்கை

உங்கள் மாணவர்களிடம் அவர்களின் இயற்கைச் சூழ்நிலையை நன்றாகக் கவனிக்கச் சொல்லுங்கள். அவர்களது வீடு மற்றும் வசிக்கும் பகுதியைச் சுற்றி என்ன வகையான மரங்கள், செடிகள் வளர்கின்றன எனபதையும், அவைகள் ஏன் அங்கு வளர்கின்றன என்பதையும் கண்டுபிடிக்கச் சொல்லவும் (காலநிலை, மண்ணின் வகை முதலியவை). விளக்கமான தகவலுக்கு அவர்கள் தங்களது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் மற்றும் நண்பர்களிடம் கலந்தாலோசித்துத் தெரிந்து கொள்ளட்டும். இந்த வழியில் அவர்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் நன்றாக கலந்துரையாட முடியும். பள்ளிக்கூடத்தில் இருக்கக்கூடிய செடிகளைக் கூட அவர்கள் பார்க்கட்டும். இங்கு அவர்கள் ஆசிரியர்களையும், ஆசிரியர்கள் அல்லாத பிறரையும் கலந்தாலோசிக்கட்டும்.

செடியின் சுயவிரம்

மாணவர்களால் எளிதாக அணுகக்கூடிய செடிகள் பற்றி ஆய்வு செய்யட்டும். அப்பொழுது பின்வருவனவற்றை அவர்கள் அறிந்து கொள்ளக்கூடும்.  செடிக்கான தாவரவியல் பெயர், அதனுடைய தோற்றம், அதனுடைய வளர்ச்சிக்கு ஏற்ற தட்பவெட்பநிலை போன்றவை. (இந்தப் பட்டியலில் மேலும் சிலவற்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்). மாணவர்கள் நூலகத்தில் கல்வி வளங்களான தாவரவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், கலைக்களஞ்சியம் – பொது, பூகோளம் மற்றும் தாவரவியல் – ஆகியவற்றையும்  பார்க்கலாம். டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரஃபிக் போன்ற டி.வி. சேனல்களையும் பார்க்கச் சொல்லலாம். இது குறித்து அந்த சேனல்கள் மிகவும் பயனுள்ள தகவல்களைக் கொடுக்கக்கூடும். அவர்கள் இண்டர்நெட்டிலும் இது குறித்த தகவல்களைச் சேகரிக்கலாம்.

இப்பொழுது குழந்தைகள் செடியின் சுயவிவரங்களைத் தயாரிக்க முடியும். அவர்கள் அந்த செடியின் படங்களை வரைந்து, அதில் லேபிள் ஒட்டி, அது குறித்து விரிவான, முறையான அறிக்கையைத் தயாரிக்க முடியும். வகுப்பில் இந்த அறிக்கைகளின் மேல் முழுவதுமாக கலந்துரையாட முடியும். அதற்குப் பிறகு இந்த விவரங்களை வகுப்பறையின் சுவற்றில் வைக்கலாம். 

செடிகளை முத்திரையிடும் போது அவை எந்த நாட்டைச் சேர்ந்ததோ அந்த நாட்டில் பேசப்படும் மொழியை அறிமுகப்படுத்துவதன் மூலம் படைப்பாற்றலை வெளிக்கொணரலாம்

 • நம் வாழ்வில் அந்தச் செடிகள் வகிக்கும் ஐந்து  பங்குகளை மாணவர்களைப் பட்டியல் இடச் சொல்லவும். உதாரணத்திற்கு சில செடிகள் நமக்கு உணவாக உதவும். சில வீடுகளை அலங்கரிக்கும், சில நமது துணிகளுக்குத் தேவையான பொருளைத் தரும் போன்றவைகள். இப்பொழுது அவர்கள் மரங்களையும், செடிகளையும் அலங்கார செடிகள், உணவுச் செடிகள் என பல விதமாகப் பிரிக்கலாம். 

தோட்டத்தில் நாடுகள்

சுற்றுப்புறச்சூழல் கல்வியில் மண் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

இந்த தலைப்பை உங்கள் மாணாவர்கள் பாடப் பயிற்சியாகச் செய்து, மற்ற பாடங்கள் மீதான அவர்களது திறமையையும் வெளிப்படுத்தலாம். குழந்தைகள் முதலில் பள்ளிக் கூடத்தில் ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் உலக நாடுகள் அனைத்தும் இடம் பெறும் படிச் செய்யலாம்.

குழந்தைகளிடம் உலக வரைபடத்தை மிகவும் கவனமாகப் பார்க்கச் சொல்லவும். இப்பொழுது மிகவும் பரந்த விளையாட்டு மைதானத்தில் குச்சியை வைத்து அவர்கள் அனைத்து கண்டங்களையும் குறிக்கலாம். தீவுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். அதற்குப் பிறகு நாட்டினுடைய எல்லைகளை வரைய வேண்டும். இது பூகோளத்தில் மிகவும் சுவராசியமான பயிற்சி ஆகும்.

நாட்டினுடைய வடிவமும், அளவும்  சரியான விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும். ஆகையால் குழந்தைகளிடம் வரைபடத்தில் அளவை எடுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். வரைவதற்கு முன்பாக  கண்டங்கள் மற்றும் நாடுகளின் வடிவம் மற்றும் அளவுகளைக்  கணக்கிட்டுக் கொள்ளச் சொல்லுங்கள். இதைச் செய்வதற்கு குழந்தைகள் தர்க்கம் மற்றும் கணிதத் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இப்பொழுது தோட்டத்தை உயிரோட்டமுள்ளதாக்க வேண்டும். உலக வரைபடத்தின் வெளிப்புறக் கோடு மற்றும் முனைகளிலும் சில விதைகளை விதைக்கச் சொல்லுங்கள். வகுப்பைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு வாரம் இந்த தோட்டத்தைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லுங்கள் – தண்ணீர் பாய்ச்சுதல், உரம்போட்டு வளர்த்தல் போன்ற அனைத்தும் அடங்கும். அறிவியலில் இது மிகவும் பிரமாதமான பயிற்சி ஆகும். சமூகப் பயன்தரும் ஆக்க பூர்வ வேலை [Socially Useful Productive Work (SUPW)],  உடற்பயிற்சி [Physical Education - (P.E) ] அல்லது நூலக வகுப்புகளுக்குச் செலவிடும் நேரத்தின் ஒரு பகுதியினை இந்தப் பயிற்சிக்காக ஒதுக்கலாம். சில நாட்களிலேயே  விதைத்த விதைகள் மொட்டு விட்டு பல வண்ணங்களில் முளைப்பதைப் பார்க்கும் குழந்தைகள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதிப்பார்கள்.

இந்த செயல்முறையின் மூலம் பல்வேறு நாடுகள் பற்றிக் கற்றுக் கொடுக்கப் பயன்படுத்தலாம். வெவ்வேறு நாட்டில் உள்ள அசல் மரங்கள், செடிகள் பற்றி சொல்லிக் கொடுப்பதின் மூலம் இதை ஆரம்பிக்கலாம். பல்வேறு நாடுகளின் அலங்கார மற்றும் உணவுச் செடிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. . 

அலங்காரச் செடிகள்

சீனா

படெலியா, மெக்ஸிகன் ஆரஞ்ச் ப்ளாஸம், ஜாஸ்மின், சைனீஸ் லாண்டெர்ன், ஐஸ் ப்ளாண்ட், விஸ்டெரியா, அஸாலீ, ரோடோடெண்ட்ரான் (Buddleia, Mexican Orange Blossom, Jasmine, Chinese Lantern, Ice Plant, Wisteria, Azalea, Rhododendron)

ஆப்பிரிக்கா

பாபிரஸ், ரெட் ஹாட் போக்கர், பெலாகோனியம், ஃப்ரீசியா, பிஸி லிஸி, கேப் டெய்ஸி (Papyrus, Red Hot Poker, Pelargonium, Freesia, Busy Lizzie, Cape Daisy)

வட அமெரிக்கா

ஈவினிங் பிரிம்ரோஸ், கோடென்ரான், போச்ட் எக் பிளாண்ட், மிஷையீல்மாஸ் டெய்ஸி, சன் ஃப்ளவர், வர்ஜினியா கிரீப்பர், ப்ளாக் ஐடு சூசான், ஃபால்ஸ் அகாசியா, வாட்டர் ஃபெர்ன் (அசோலா), காமன் அமர்நாத், ஆர்ணமெண்ட்டல் கரண்ட். (Evening Primrose, Godenrod, Poached Egg Plant, Michaelmas Diasy, Sunflower, Virginia Creeper, Black-eyed Susan, False Acacia, Water Fern (Azolla), Common Amaranth, Ornamental Currant)

ஜப்பான்

ஜாப்பானிய மேப்ள், க்வின்ஸ், பிளிடீங் ஹார்ட், டைகர் லில்லி, கிராப் ஆப்பிள் (Japanese Maple, Quince, Bleeding Heart, Tiger Lily, Crab Apple)

உணவுச் செடிகள்

ஓக்ரா (வெண்டைக்காய்), ஆபர்ஜீன் (கத்தரிக்காய்), ஸ்பினாஷ், வெள்ளரிக்காய், மிளகுகள். (Okra (Ladies’ Fingers), Aubergine (Brinjal), Spinach, Cucumber, Peppers)

ரஷ்யா/போலந்து

முட்டைக் கோஸ், பீட்ரூட் (Cabbage, Beetroot)

தி பெனெலக்ஸ் நாடுகள் (The Benelux Countries)

காரட், பார்ஸ்நிப்ஸ், ஸ்வீடி, டர்னிப் ( Carrots, Parsnips, Swede, Turnip)

தென் அமெரிக்கா

உருளைக் கிழங்கு, தக்காளி (Potato, Tomato)

நார்வே

பெரிஸ், காளான்கள் (Berries, Mushrooms)

 • கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் போலக் குழந்தைகளிடம் கேளுங்கள்

1. நம் நாட்டிலும் பிற நாடுகளிலும் வளரக்கூடிய உணவுச் செடிகளின் பெயர்களைக் குறிப்பிடவும்

2. இறக்குமதி செய்யக்கூடிய சில உணவுகளின் பெயர்களைக் குறிப்பிடவும்.

3. செடிகளை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றுவதால் சுற்றுப்புறச் சூழலில் ஏற்படும் விளைவுகள் என்ன?

உருளைக்கிழங்கு, அரிசி, சோளம் மற்றும் நவதானியங்கள் போன்ற செடிகளைப் பற்றிய தகவல்கள் மேலே குறிப்பிட்டவைகளையும்,  உலகத்தின் மற்ற உணவு பிரச்னைகள் பற்றியும் ஆராய ஒரு சிறந்த அடிப்படைப் பொருளாக அமையும்.

குழந்தைகளிடம் சில நாடுகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அந்த நாடுகளின் மதம், கலாச்சாரத்துடன் இணைந்த செடிகள் என்னவென்று தெரிந்து கொள்ளச் சொல்லவும்.

மற்ற செயல்முறைகள்

இதற்கும் மேலாக, குழந்தைகளிடம் சுற்றுப்புறச்சூழலின் மேல் அன்பை வளர்ப்பதற்குக்  கீழே குறிப்பிடப்பட்டுள்ள செயல்முறைகளை நீங்கள் செய்து காண்பிக்கலாம்.

 • குழந்தைகள் அவர்களால் முடிந்தவரை எங்கு வேண்டுமானாலும் என்ன மரங்கள் வேண்டுமென்றாலும் நடலாம்.  
 • இயற்கை மற்றும் சுற்றுப்புறச்சூழல் குறித்து நிறையப் திரைப் படங்கள் உள்ளன. கிரிஸ் கர்னாடின் `செலுவி’ போன்ற படங்களைக் காண்பிக்கலாம்.
 • வகுப்பில் ஒவ்வொரு குழந்தையும் ஒரு மரமாகவோ அல்லது செடியாகவோ தங்களை அனுமானித்துக் கொண்டு அது குறித்து இரண்டு நிமிடம் பேசலாம்.
 • ஜூலை முதல் வாரத்தில் பள்ளிக்கூடத்தில் `வனமஹோத்ஸவ்’ வை நடத்தலாம். அந்த நாளில் பள்ளிக்கூட வளாகத்தில் குழந்தைகள் மரங்களை நடலாம். ஏற்கனவே அதிகமான மரங்கள் இருந்து, இடப்பற்றாக்குறை இருந்தால் மாணவர்கள் அன்றைய தினம் தோட்டக்காரருக்குப் பதிலாக அந்தச் செடிகளை அவர்கள் பராமரிக்கலாம். அதோடு தினமும் செடிக்கு தண்ணீர் விடுவதாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.
 • மாணவர்களிடம் சுற்றுப்புறச்சூழல் குறித்த சில தலைப்புகளைக் கொடுத்து வகுப்பில் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யலாம். உதாரணமாகப், ‘பழங்குடி மக்களை அவர்களுடைய இயற்கையான வசிப்பிடத்திலிருந்து அப்புறப்படுத்தி அதிக மக்கள் வாழும் இடத்தில் குடியமர்த்தலாமா??’ அல்லது `காகிதம் உபயோகிப்பதைக் குறைத்துக் கொள்ளலாமா?’ இப்பொழுது வகுப்பில் உள்ளவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்து இந்த தலைப்பை ஆதரித்து ஒரு குழுவும், எதிர்த்து இன்னொரு குழுவும் விவாதிக்கலாம்.     
 • பசுமைப்புரட்சி, சிப்கோ இயக்கம் முதலான சுற்றுப்புறச்சூழல் சம்பந்தப்பட்ட இயக்கங்கள் குறித்த விஷயங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
 • இன்னும் சிறு முயன்று, குழந்தைகள் `சமையலறைத் தோட்ட’த்தை அவர்களாகவே உருவாக்கலாம். பாகற்காய், கடுகு, கத்திரிக்காய், தக்காளி, எலுமிச்சை, மிளகாய், வெந்தயம் மற்றும் கருவேப்பிலை போன்றவைகள் எளிதாக வளரக்கூடியவை. அவர்கள் பள்ளியில் உள்ள தோட்டக்காரரையோ அல்லது நர்சரியில் உள்ள ஒருவரின் உதவியை இதற்கு நாடலாம். 

இந்தப் பயிற்சியின் முடிவில் உங்களுடைய மாணவர்கள் இயற்கையுடன் மிகவும் நெருக்கமாக தங்களது உறவைப் பகிர்ந்து கொள்வதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

டீச்சர்ஸ் ப்ளஸ், இதழ் 67, ஜூலை ஆகஸ்ட் 2000ல் முதன் முதலாக வெளியான இந்தக் கட்டுரை இங்கு சில மாற்றங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது.

18487 registered users
7228 resources