தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதும், பாடத்தை நன்றாகக் கற்றுக் கொடுப்பதும்.

தேர்வுகளை எதிர்கொள்ள மாணவர்களைத் தயார்படுத்தும் தருணங்களில், மாணவர்களின் கவனம் பாடத்தைக் கற்றுக் கொள்ளும் மன நிலையிலிருந்து திரும்புகிறது என்பது தான் கிருஷ்ணமூர்த்தி பள்ளிக்கூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் பலரும் மனத்தளவில் கொண்டுள்ள கருத்தாக இருக்கிறது. இருப்பினும்,  தேர்வுக்குத் தயார் செய்வதுதான் கற்றுக்கொள்வதில் உள்ள பிரதானமான குறைபாடு என்று நாம் அடையாளம் கண்டுகொள்வதற்கு முன்பாக வேறு ஏதாவது காரணிகள் இருக்கிறதா என்பது பற்றி நாம் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அறிவியல் மற்றும் கணிதத்தை நாம் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.  பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் கூட மாணவர்களின் திறமை குறிப்பிடத்தக்க வகையில் மாறுபடும். பெரும்பாலான மாணவர்கள் அறிவியல் பாடத்தைத் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைத் தவிர மற்ற காரணங்களுக்காகத்தான் தெரிவு செய்கிறார்கள். கற்பித்தல் – கற்றல் செயல் முறையில் ஆசிரியர்களாக நாம் இந்தக் காரணத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆகையால், கற்றுக் கொள்வதில் குறைந்த ஆர்வம் கொண்டவர்களிடம் நமது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளும் அதே நேரத்தில் ஆர்வம் உள்ளவர்களின் தேவைகளையும் அசட்டை செய்யக்கூடாது. ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் இந்த நிலை இன்னும் மிகவும் மோசமாக இருக்கிறது. ஏனென்றால், அந்த வகுப்பு மாணவர்களுக்கு தாங்கள் படிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் பாடங்கள் மிகவும் குறைவாக இருப்பதால், தாங்கள் விரும்பிப் படிக்கும் பாடங்களைத் தேர்வு செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர்.

நமது வகுப்பறைகளில் உள்ள பல்வேறு வகையான மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வது என்பது மிகவும் சவாலானது. அதற்குத் திறமையும், அக்கறையான சிந்தனையும் ஆசிரியர்களுக்கு வேண்டும். பாடத்தில் உள்ள கருத்துக்கள் என்னதான் மிகவும் ஆழமாகவும், சுவராசியமாகவும் இருந்தாலும் மாணவர்களுக்கு அவைகள் முதலாவது வெளிப்பாடு என்பதால் அவைகளை அவர்கள் முழுவதும் புரிந்து கொள்ள முடியாது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பெளதீகத்தில் நியூட்டனின் விதிகள் (அல்லது கணக்கில் கால்குலஸ்) போன்ற அடிப்படையான விதிகளை முதல் தடவையே மாணவர்களால் முழுவதுமாக கிரகித்துக் கொள்ள முடியாது.  எனினும், நாம் இது குறித்து கவலை அடையத் தேவையில்லை. ஏனென்றால், அவர்கள் இதே கருத்துக்களைத் திரும்பத் திரும்ப அதிகமாக அடிப்படை நிலைகளில் வருடங்கள் தோறும் கேட்டு வருகிறார்கள். ஆகையால் நாம் பாடம் கற்றுக் கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, எதிர்பார்ப்புகள் மற்றும் குறிக்கோள்கள் பற்றியதில் ஒரு தெளிவுடன் இருப்பது மிக அவசியமானதாகும். பெரும்பாலும் பெளதிகம் போன்ற பாடங்கள் மூலம் மாணவர்கள் அடிப்படைத் திறமைகளைப் பெற ஆசிரியர்கள் உதவுவதுடன், அந்த பாடத்தில் சிறப்பான சுவையை அவர்கள் உணரும் படிச் செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டு, அந்த பாடத்தில்  ஆர்வத்தை அவர்களுக்குத் தூண்டி, அந்தப் பாடத்தைத் தொடர்ந்து படிப்பது பயனுள்ளது என்பதை உணரச் செய்ய வேண்டும்.

சில நேரங்களில் தேர்வின் தேவைகளை முன்னிலைப் படுத்தி மிகவும் மோசமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டத்தினால் ஆசிரியர்கள் குழம்பிப் போய்விடுகிறார்கள் என்பது என் கருத்து. தேர்வுக்குத் தேவையானவை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை எளிதாகச் சமாளித்துவிடலாம். என்றாலும், மோசமாக வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம் வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொள்ளச் செய்யும். உயர் வகுப்புகளுக்கான அறிவியல் பாடத்தில் அதிகப்படியான தலைப்புகளைத் திணிப்பது வழக்கமாகிவிட்டது. இதில் அறிவியல் பாடம் பற்றிய அடிப்படைக் கோட்பாடுகளை விளக்குவதற்கு தேவையற்ற பலவகையான விபரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

இருப்பினும், அறிவியலைப் பொறுத்தவரை தலைப்புகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாகவும், அறிவியல் பாடத்திட்டத்திற்கு ஏற்றதாகவும் தான் இருக்கும். இதனால், மாணவர்கள் எங்கு இருப்பினும், இத்தகைய பாடங்களின் மேல்நிலைப் படிப்பை தொடருவதற்கு வசதியாக அவைகள்அமைந்துள்ளன. ஆனால், வரலாறு, பொருளாதாரம் போன்ற பாடங்களின் பாடத் திட்டங்களில் இவைகள் அதிக அளவில் சிக்கல்கள் கொண்ட பிரச்சனைகளாக இருக்கின்றன. இதற்குக் காரணம், பிரச்னை எழுப்பக்கூடிய இயல்பு கொண்ட தலைப்புகளின் தேர்வுகள் மற்றும்  அவைகளில் விளக்கப்படும் கருத்துக்கள் ஆகியவைகளாகும். ஆனால், அதைப் பற்றி இங்கு விவாதிப்பது இந்தக் கட்டுரையின் நோக்கத்திற்கு அப்பாற்பட்டது.

இந்தக் கட்டுரையில் பலவகையான திறமைகள்  கொண்ட மாணவர்களைத் தேர்வு எழுதத் தயார் செய்வதற்கான சில வழிமுறைகள் முன் மொழியப்பட்டிருக்கும் அதே சமயத்தில், கற்பிக்கும் தரம் இதனால் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்கவும் வழிவகுக்கப்பட்டிருக்கிறது. உண்மையில், தேர்வு எழுதுவதற்கு ஆயத்தமாகும் செயல், பாடத்தைச் சிறப்பாகக் கற்றுக் கொள்ளுவதற்குக் குறுக்கே வரக்கூடாது. சரியான முறையில் வழிகாட்டப்பட்டால், இந்தச் செயலே பல்வேறு வகைப் பட்ட மாணவர்களின் ஒட்டு மொத்தமான கற்றலை அதிகரிக்கச் செய்யும். என்னுடைய உதாரணங்களை யெல்லாம் பெளதீகப் பாடத்திலிருந்து எடுத்திருந்தாலும் கூட சில அவதானிப்புகளும், ஆலோசனைகளும் உண்மையிலேயே பொதுவான இயல்பு கொண்டவைகளானதால், இவைகள் மற்ற பாடங்களுக்கும் பொருந்தும். பெரும்பாலான ஆலோசனைகள் தேர்வுடன் சம்பந்தப்பட்டது இல்லை என்றாலும், அவைகள் அனைத்தும் எப்படியும் நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவாக விரும்பக்கூடிய அறிவு அல்லது  கல்வித் திறமைகள் ஆகும்.

பலதரப்பட்ட கல்வித் தேவைகளை அணுகுவது

நமது வசதிக்காக மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரித்துக் கொள்வோம்:

  1. பாடத்தை ஓரளவிற்கு வேகமாக எளிதாகப் புரிந்து கொண்டு, அந்தப் பாடத்தைப் பற்றி நன்கு தேர்ச்சி பெற்றவர்கள்.
  2. புரிந்து கொள்வதில் பிரச்னை உள்ளவர்கள்.

உண்மையில், இந்தப் பிரிவுகள் ஏதோ தவிர்க்க முடியாத பிரிவுகள் என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. இருந்த போதிலும், ஆசிரியரின் கருத்துப்படி இந்தப் பிரிவுகள் பலவகைப்பட்ட கலவையான திறமைகள் கொண்ட வகுப்பில் கற்பிப்பதற்கு தகுந்த அணுகுமுறையைத் திட்டமிட ஆசிரியர்களுக்கு உதவியாக இருக்கும். முக்கியமாக தேர்வுத் தயாரிப்புக்கும் அவை உதவியாக இருக்கவேண்டும் என்பதும் ஆசிரியரின் வெளிப்படையான குறிக்கோள்களில் ஒன்றாக இருக்கிறது.

எந்த முறையில் வகுப்பறையில் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று நான் இங்கு சொல்லப் போவதில்லை. இது ஆசிரியரின் அனுபவம் மற்றும் மன நிலையைப் பொறுத்து, பல வடிவங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக, பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களை அவர்கள் தனியாகப் பாடத்தைப் படிக்கச் சொல்லி அதற்குப் பிறகு மிகவும் விரிவான கலந்துரையாடலை நிகழ்த்துவார்கள். அல்லது தலைப்பு குறித்து மேலெழுந்தவாரியாக தயார் செய்து கொள்ளச் சொல்லி அதற்குப் பிறகு ஆசிரியரின் வழிகாட்டுதலின் மூலமாக மாணவர்களை பாடத்தின் அர்த்தத்தை உணரும் படி செய்வார்கள். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் செயல்முறை பயிற்சி, பரிசோதனை அவதானிப்புகளைச் சீராக பதிவு செய்வது மற்றும் படிப்படியாக பயிற்சி செய்தல் போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் குறிப்பிடும் படியான பலவீனத்தை கண்டுபிடித்தல், தகுந்த பின்னூடல் கருத்துப் பரிமாறல், மாணவர்களுக்கு அவர்களது குறைபாடுகளை அறியச் செய்து, அவைகளைக் களைய பயிற்சிகளை அளித்தல் ஆகியவைகளில் நான் கவனம் செலுத்துவேன். இந்த செயல்முறைக்கு முறையான மதிப்பீடு மிகவும் அவசியமானது என்பதை நாம் உணர வேண்டும்.    

முதலில், ‘ஏன் முதல் குழுவைச் சார்ந்த மாணவர்கள் பரீட்சைகளில் தேவையான அளவிற்குச் சரியாக செயல்படாமல் அடிக்கடி தோல்வியுறுகிறார்கள்?’ என்பதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும். பாடத்தைப் புரிந்து கொண்ட மாதிரியான ஒரு உணர்வை உருவாக்கிக் கொள்வது இந்தக் குழு மாணவர்களிடம் காணப்படும் பொதுவான நிலையாகும். அப்படிப்பட்ட மாணவர்களால் பாடத்தின் பொதுக் கருத்துக்களையும்,  பாடப் புத்தகத்தில் உள்ள பல வகையான பிரச்சனைகளையும் தொடர்பு ஏற்படுத்தும் திறனை அடைய முடிகிறது. இருப்பினும் தேர்வின் போது, இவர்கள் எவைகளால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் விளக்கமான பதில்கள் அளிப்பதில் கவனம் செலுத்துவதில்லை என்பதாகும். ஆசிரியர் அடிக்கடி பயன்படுத்தும் சொற்றொடரான ‘கவனக்குறைவு’ என்பது இதைத்தான். இந்தக் கவனக் குறைவு பல பகுதிகளில் பிரதிபலிக்கும். அவற்றில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.   

1. கொடுக்கப்பட்ட பதிலில் பல வகையான குறிப்புகள் தர்க்க ரீதியில் இல்லாமல் கவனமற்ற முறையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது.

2. சில குறிப்புகள் மிகவும் விளக்கத்துடனும் (ஒருவேளை இதனால் மாணவர்களுக்கு அவைகளைப் பற்றி நன்கு தெரிந்திருக்கக்கூடும்) மீதியுள்ள குறிப்புகள் மிகவும் சுருக்கமாகவும் கொடுக்கப்பட்டுள்ளன.

3. மிகக் குறைந்த மதிப்பெண்கள் கொண்ட கேள்விகளுக்கு மிகவும் விவரமாகப் பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன (இவற்றில் பெரும்பாலானவை பொருத்தமற்றது). எதற்கு விரிவான பதில்கள் வேண்டுமோ அவற்றிற்கான பதில்கள்  மேம்போக்காக கையாளப்பட்டுள்ளது.

4.  எண்ணால் விளக்கும் பதில்கள் அலகைக் கொண்டிருக்கவில்லை

5. வரைபடங்களில் அச்சுக்களுக்குச் சரியான லேபிள்கள் இல்லாமல் வரையப்பட்டுள்ளன அல்லது முற்றிலும் தவறான வடிவங்கள் வரையப்பட்டிருப்பதுடன், கொடுக்கப்பட்ட பரிசோதனை அவதானிப்புகள்  சம்பந்தமில்லாமல் இருக்கின்றன.

6. கேள்விகளை ஒழுங்காகப் படிக்காதவர்களும், சோதனைக்கூடம் சம்பந்தப்பட்ட தேர்வுகளில் கவனமாக வழிகாட்டுதலைப் படிக்காத மாணவர்கள் எப்பொழுதும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

7. கேள்விகளுக்கான தீர்வுகள் (எண்ணில் குறிப்பிடும் தகவல் மற்றும் எழுத்தில் குறிப்பிடும் தகவல்- both numerical and non-numerical) தகுந்தபடி படிப்படியாக அளிக்கப்பட வில்லை. உதாரணமாக, பெளதிகத்தில் மதிப்பைக் கண்டுபிடிப்பதற்கான சூத்திரம் எதையும் அவர்கள் எழுதுவதில்லை – வெறும் எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும் அல்லது இன்னும் மோசமாக இறுதி விடை மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.  

மிகவும் நன்றாக புரிந்து கற்கும் மாணவர்களிடையேயும் இந்த மாதிரியான போக்கு இருப்பதை ஆசிரியர் அறிந்து கொண்ட பிறகு, இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண பலவிதமான அணுகுமுறையை அவர் தமது வழிகாட்டுதலில் உணர்வுப் பூர்வமாக ஈடுபடுத்தி  செயல்படுத்த முடியும். அவைகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.     

1. ஆசிரியர் அடிக்கடி குறைந்த நேர அளவிலான தேர்வுகளை நடத்தவேண்டும் அல்லது வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி தேர்வுக்கான சூழ்நிலையில் அந்த மாணவர்கள் பதில்களை எழுதச் சொல்லவேண்டும். பொதுவாக, வீட்டுப் பாடங்களைச் செய்யச் சொல்வது மாணவர்களுக்குத் தேவையான திறமைகளைப் பெறுவதற்கு உதவுவதாகத் தோன்றவில்லை.  

2.மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துக் குறைகளையும் கேள்வித்தாள் திருத்தும் போது ஆசிரியர் மனதில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற மாதிரி தகுந்த குறிப்புகளை விடைத்தாள்களின் ஓரத்தில் எழுத வேண்டும். மதிப்பெண்கள் கொடுப்பதாக இருந்தால் ஒரே மாதிரியாக ஒவ்வொரு தவறுக்கும் ஏற்றது போல மதிப்பெண்களைக் குறைக்க வேண்டும். மதிப்பீடு மிகவும் உயர்ந்த அளவிலான துல்லியமும், நிலையாகவும் இருப்பது முக்கியம். தனிப்பட்ட அபிப்பிராயபேத அடிப்படை மதிப்பீட்டைத் தவிர்க்க வேண்டும்.

3.மாணவர்களுக்கு உடனடியாக பின்னூட்டல் அளிப்பது மிகவும் அவசியமானது. மதிப்பீடு செய்த வினாத்தாளை ஒரு வாரத்திற்கும் மேலான பிறகு கொடுத்தால் அது பின்னூட்டலின் பயனின் வலுவைக் குறைத்துவிடும். மாணவர்களும் அந்தத் தேர்வைப் பற்றியும், அதில் உள்ளடங்கிய பாடங்கள் பற்றியும் மறந்துவிடுவார்கள்.

4. தேர்வின் மூலம் பின்னூடல் பெறப்படுகிறது என்பதை மாணவர்களிடம் பதிய வைக்க வேண்டும். அந்த பின்னூடல் ஆசிரியர் - மாணவர் ஆகிய இருவருக்கும் தேவையாகும். ஒவ்வொரு மாணவனின் பலம் மற்றும் பலவீனங்கள் இந்தப் பின்னூடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். தேர்வு என்பது மாணவர்களை ஒப்பிட்டுப் பார்த்து, சிறந்தவர்களை அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய பயிற்சி இல்லை. ஆகையால், மாணவர்களிடையேயான ஒப்பீட்டை உறுதியாக தவிர்க்க வேண்டும்.

இரண்டாவது வகையான மாணவர்கள் (பாடத்தைப் புரிந்து கொள்ள சிரமப்படுபவர்கள்) வெளிப்படுத்தக்கூடிய அறிகுறிகள் மேலே குறிப்பிட்ட பலவீனங்களை விட அதிகப்படியான சிரமங்களைக் காட்டும். அவற்றில் சில கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

1. தேர்வுக்குப் பிறகு அவர்களுடைய பொதுவான பின்வாங்கல் : எனக்கு எல்லாம் தெரியும் என்று நான் நினைத்தேன் ஆனால் கேள்விக்கு பதிலளிக்க முடியவில்லை

2. கணக்குத் தீர்வுக்கு தவறான சூத்திரங்களை அவர்கள் பயன்படுத்துவார்கள் (ஃபோட்டானுக்கு உண்டான சூத்திரத்தை எலக்ட்ரானுக்கு பயன்படுத்துவது)

3. ஒரே மாதிரி இருக்கும் குறியீடுகளைப் பார்த்து குழம்பிப் போவார்கள் (உதராணமாக, நவீன பெளதிகத்தில் வேகத்திற்கான v, வோல்ட்டேஜ்ஜூக்கான V)

4. இரண்டு வரைபடம் பற்றி அவர்கள் குழப்பமடைவார்கள். (For example, charge versus time and current versus time graphs of charge/discharge process of a capacitor).  இந்த வகையைச் சேர்ந்த மாணவர்கள் இது மாதிரி பல சிரமங்களை அனுபவிப்பார்கள்.

இந்த மாணவர்கள் வெளிப்படுத்திய சிரமங்களின் இயல்புகள் மற்றும் அவைகளுக்கான காரணங்கள் ஆகியவைகளைப் பரிசோதித்து அறிந்து கொள்வது ஆசிரியர்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. தனிப்பட்ட பிரச்னைகள் வேறுபடலாம் ஆனால் பொதுவான சில காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

1. தவறான படிப்பு முறைகளினால் தான் பெரும்பாலான பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்படுகின்றன. மேலே குறிப்பிட்ட ‘பொதுவாக தவிர்க்கப்படவேண்டியவை’ என்பதில் அடங்கி உள்ள உண்மை என்னவென்றால், பெரும்பாலான மாணவர்கள் கற்பதற்குப் பதிலாக பாடத்தை படிக்கும் போக்கினை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். பெளதீகம் போன்ற பாடங்களைப் படிக்கும் போது, அவைகளின் தேவை என்ன வென்றால், ஒவ்வொரு வழி முறையையும் உய்த்துணர்வு முறையில் (deductive process) கவனமாக ஆராய்வதாகும். ஆனால், இந்தப் பிரிவு மாணவர்களோ அந்த வழி முறைகளை சில ஞாபக சக்திக்கு உதவும் சாதனங்கள் (Mnemonic devices) மூலம் வெறுமனே மனப்பாடம் செய்ய முயலுகிறார்கள். 

2. வீட்டுப்பாடமாகக் கொடுக்கப்பட்ட கணக்குகளுக்குத் தீர்வு காண அவர்கள் பாடப்புத்தகத்தில் சூத்திரத்தைத் தேடுவார்கள். பெரும்பாலான கணக்குகள் மிகவும் நேரடியானவைகளாக இருப்பதால்,  கொடுக்கப்பட்ட கணக்கிற்கு சரியான சூத்திரத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. மாணவருக்குத் தீர்வு கிடைத்தாலும், இந்த அணுகுமுறையால் உண்மையாக கற்றல் என்பது நிகழ்வதில்லை.

3. மிகவும் கஷ்டமான கணக்குகளுக்கு விடைகாணும் போது, முக்கியமான வழி காண அவர்கள் பொதுவாக திறமையான மாணவரின் உதவியை நாடுவார்கள். இருப்பினும், அந்த மாணவர் தானாக இப்படிப்பட்ட கணக்குகளுக்கு விடைகளுக்கானும் வழி முறைகளை புரிந்து கொள்வதில்லை.

அந்த மாணவர்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். அதற்குப் படிப்புத் திறமைகளின் (study skills) பல பரிணாமங்களை அறிந்து மாணவர்கள் மேம்பட சிறந்த முறையில் ஊக்குவிக்க வேண்டும். இந்தப் படிப்புத் திறமைகளில்  பலவும் அனைத்து மாணவர்களுக்கும் பயன்படும்.

1. படிக்கும் போது சிறு குறிப்புகள் எடுத்துக் கொள்வது மிகவும் குறிப்பிட்த்தக்க படிப்புத் திறமையாகும். உரைநடை முழுவதையும் மாணவர்கள் படித்து குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமான பகுதிகளை மேற்கோள் செய்து கொள்வது மிகவும் எளிமையான வகைமுறையாகும் அல்லது முக்கியமான சொற்களை, வரையறைகளை, சூத்திரங்களை குறித்துக் கொள்ளலாம். இந்தச் செயல் முறைகளினால் அடுத்தடுத்த முயற்சிகளின் போது மறுமுறை படிப்பதற்கு எளிதாக இருக்கும்.   

2. அவர்கள அத்தியாயத்தைப் படித்து முடித்தவுடன் புத்தகத்தைப் பார்க்காமலேயே வரைபடம் மற்றும்  விளக்க வரைபடம் வரையவும் பயிற்சி செய்து பார்க்கவேண்டும். இதன் மூலம் படித்த பாடத்தில் அவர்கள் தொடர்பு மற்றும் உருவகப் படுத்திக் கொள்வதில் ஒரு அர்த்தம் ஏற்படும் வாய்ப்பு உண்டாவதால், அவைகளை நினைவில் நிறுத்தும் நிலைப்பாடும் அதன் காரணமாக அதிகரிக்கிறது.  

3. போர்டு தேர்வுக்குத் தயார்படுத்திக் கொள்ளும்போது அவர்கள் அனைத்து முக்கியமான சூத்திரங்களையும் தனியாக ஒரு நோட்டில் குறித்துக் கொண்டு அதற்கான பயன்பாடுகளையும் இணைத்து வைத்திருக்க வேண்டும். இதே போன்ற அணுகுமுறை வரைபடம், கொள்ளளவின் அலகுகள் மற்றும் வரையறைகளுக்கும் பொருந்தும். 

4. மாணவர்கள் படித்து முடித்த அத்தியாயத்திற்கு உடனடியாக பதிலளிக்க முயற்சிக்கக் கூடாது. படித்து முடித்ததற்கும், பதில் எழுதுவதற்கும் போதுமான இடைவெளி வேண்டும். இந்த நேர இடைவெளி மாணவர்களுக்கு அவர்களின் ஞாபக சக்தியை சோதித்துக் கொள்ள உதவும்.

5. போர்டு தேர்வுக்கு தயார் செய்து கொள்ளும்போது அவர்கள் பல அத்தியாயங்கள் கொண்ட அனைத்துப் பகுதிக்கும் பதிலளிக்க அவற்றையெல்லாம் ஒரு வாரத்திற்கு முன்பே படித்திருக்க வேண்டும். இதனால் மாணவருக்கு பாடங்களில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ள முடியும். கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது புத்தகத்தைப் பார்க்கக்கூடாது என்பது மிகவும் தெளிவான ஒன்று. இது மாணவர்கள் புரிந்து கொள்வதற்கும், குறிப்பிட்ட பலவீனமான பகுதிகளை அடையாளம் கண்டு கொள்ளவும் வழி வகுக்கும்.

6. கணித விதிகளை புத்தகத்தைப் படிப்பதற்கு முன்பே முயற்சி செய்து பார்க்க வேண்டும். இந்த விதிகளை ஆசிரியர் ஏற்கனவே வகுப்பில் கற்றுக் கொடுத்திருப்பார். மாணவர்கள் வகுப்பில் கற்றுக் கொடுப்பதை எந்த அளவிற்கு நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பதை சோதித்துப் பார்ப்பதற்கான அணுகுமுறை இது.

7. விரிவான பதில்கள் தேவைப்படும் கேள்விகளுக்கு பொருத்தமான அனைத்து குறிப்புகளையும் ஒரு ஒழுங்கு வரிசையில் குறித்துக் கொள்ள வேண்டும். இதனால், பதில்களை மிகவும் துல்லியமாகவும், தர்க்க ரீதியாகவும் எழுத உதவுவதுடன்,  தேர்வுக்கு முன்பு விரைவாக மறுமுறைபடிக்கவும் உதவியாக இருக்கும்.

மேற்கூறிய ஆலோசனைகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டுமெனில் ஆசிரியர்கள் மாணவர்களின் கல்விப் படிப்பின் விவரங்கள் – அவர்களின் பலவீனம், பலம், கோட்பாடுகளைக் கிரகித்துக் கொள்வதில் உள்ள குறைபாடுகள் – பற்றி மிகவும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். இந்தத் தகவல்களை வகுப்பு உரையாடல்கள் மற்றும் பயிற்சிகள் ஆகியவைகளினால் மட்டும் சுலபமாகச் சேகரித்து விட முடியாது. இதற்கு, கவனத்துடன் வடிவமைக்கப் பட்ட தேர்வுகள் அல்லது அதற்கு சமமான மற்ற வழிகள் மூலம், கற்பிற்பிக்கப்பட்ட பாடங்களை மாணவன் கிரகித்ததை மதிப்பீடு செய்வதற்கான தேவை ஏற்படுகிறது.  கேள்வித்தாள் மோசமாக வடிவமைக்கப்பட்டிருந்தால், அதனால் பெரும் பின்னூடலின் பயன் ஆசிரியர் மற்றும் மாணவர் இருவருக்கும் மிகவும் குறைவாகவே இருக்கும். உதாரணமாக, கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்தால் மாணவர்கள் மிகவும் மோசமாக பண்ணுவார்கள், கேள்வித்தால் மிகவும் எளிதாக இருந்தால் அனைவரும் நன்றாக செய்வார்கள். இதனால் தனியொருவரின் பலவீனம் மறைக்கப்பட்டு விடும். எனவே கேள்வித்தாளின் கேள்விகள் - கடினமான கேள்விகள், சுலபமான கேள்விகள் - என்ற கலவையாக இருக்க வேண்டும். இதன் காரணமாக, குறைவான திறமையுள்ள மாணவன் குறைந்த பட்சம் சில கேள்விகளுக்காவது பதிலளிக்கும் போது, மிகவும் திறமையான மாணவனுக்கு சில கேள்விகள் சவாலாக இருக்கும். பல்வேறு விதமான திறமைகளை - அதாவது நினைவாற்றல் (உதாரணத்திற்கு, வரையறைகள் மூலமாக), தர்க்கரீதியிலான சிந்தனை ( சிறிய தர்க்கக் கேள்விகள் மூலமாக), கட்டுரை எழுதுதல், படம் வரைதல் மற்றும் அது சம்பந்தப்பட்ட திறமைகள் -  சோதிப்பதாக கேள்விகள் அமையவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் பதிலளிக்க போதுமான நேரம் கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்கள் நேரம் போதவில்லை என்கிற நிலைக்குத் தள்ளப்படமால் இருப்பார்கள். இந்த வழியில் அவர்களுடைய திறமைகள் அல்லது குறைப்படுகள் மிகவும் சரியாகத் தெரியவரும்.      

இறுதியில், வகுப்பில் உள்ள பல்வேறு வகையான மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கவும், மதிப்பீடு மற்றும் பின்னூடல் வழியினை மேற்கொள்வதற்கும் ஆசிரியர் ஏற்பாடு செய்தால்,  தேர்வு எழுத வேண்டும் என்ற நிலை இருப்பினும், பாடத்தின் ஒட்டுமொத்த கற்றலின் தன்மை அனைவருக்கும் அதிகரிக்கும்.

 

 

18923 registered users
7393 resources