கன்ஸ்ரக்டிவிசம் - Constructivism

கன்ஸ்ரக்டிவிசம் - Constructivism

ஆக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர், டீச்சர்ஸ் ஆப் இந்தியா போர்டல்.

கன்ஸ்ரக்டிவிசம் - Constructivism - என்பதை ‘கருத்துக் கட்டமைப்புக் கற்றல் முறை’ என்று தமிழாக்கம் செய்யலாம். இந்தத் தத்துவம் தமிழ்க் கல்வியாளர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டு முறையாகும்.

இந்த முறையில் கல்வி கற்பித்தலும், கல்வி கற்றலும் நிகழ்ந்தால், அது ஆசிரியருக்கும் - மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வலுவான புதிய முறையாகி இதன் மூலம் திறமையான வேலைக்கு ஏற்ற மாணவர் சமூதாயத்தை உருவாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் என்று நம்பப்படுகிறது.

இந்த நவீன முறைத் தத்துவம் - ஆசிரியரிடம் பாடம் கேட்டதை, அப்படியே மனனம் செய்து, எந்தவித சிந்தனையும் செய்து சீர்தூக்கிப் பார்க்காமல், மூளையிலே ஞாபகப்படுத்தும் மரபு வழிக் கற்பிக்கும் முறையைத் தவிர்த்து, புதிய பாதையில் ஒவ்வொன்றையும் குழுவாக ஆராய்ந்து, ஒப்பிட்டு, ஒப்புக்கொண்டு, ஒவ்வொரு செங்கலாகக் கட்டிடம் எழுப்பும் கட்டிடக் கலைஞர் போல் கருத்துப் படிவங்களை அடுக்கி, கருத்துக் கட்டிடங்களை எழுப்பும் - வழி முறையைத் தான் குறிக்கிறது.  கருத்துக்கள், விதிகள், தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவைகள் அனைத்தும் மனத்தில் நன்கு பதிந்து, அவைகள் அனைத்தும் கற்பவர்களின் பொக்கிஷங்களாக மனத்தில் பசுமரத்து ஆணிபோல் பதிந்து விடும் வழிமுறையை வகுப்பதுதான் இந்தக் ‘கன்ஸ்ரக்டிவிசம்’ என்ற ‘கட்டமைத்துக் கற்றல்’ என்ற கொள்கையின் ஆணிவேராகும்.

இதைக் கீழ்க்கண்ட ஆசிரியர் - மாணவர்கள் உரையாடல் நன்கு எடுத்துக் காட்டும்:

ஆசிரியர்: நான் சொல்கிறேன்

                நீங்கள் கேளுங்கள்

               நான் கற்பிக்கிறேன்.

மாணவர்கள்: நாங்கள் கேட்கிறோம்.

                     நாங்கள் அலசுகிறோம்.

                     நாங்கள் ஆராய்கிறோம்.

                     நாங்கள் வடிகட்டுகிறோம்.

                     நாங்கள் கட்டுகிறோம்.

                     நாங்கள் கற்கிறோம். 

மரபு வழிக் கற்பித்தலில் “முன்பே ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கைகள் அப்படியே ஒப்புக்கொள்ளப்படவேண்டியவைகள். அவைகளை ஆராய வேண்டிய அவசியமில்லை. அதன் அடிப்படையில் கல்வியை ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் போதிக்க வேண்டும்” என்பது தான் விதியாக இருக்கிறது. அதாவது முன்பே ஒருவர் மனத்தில் உள்ள கருத்து ஆராய்ந்து, அதன் அடிப்படையில் அவைகளை அழித்தோ, மாற்றியோ செய்து நிகழ்கால கருத்துக்களை மனத்தில் பதிய வைக்க வேண்டும். அதாவது இதில் பழைய கருத்துக்கள் அழிக்க வேண்டிய நிலையும் உருவாகலாம்.

அணு பிளந்தால் அறிவு பிறக்கும். அதாவது ஒன்றை அழித்தும் - அதை ஆய்வு என்று சொன்னாலும், அறிவைப் பெறலாம். இதுவும் ஒரு விதத்தில் - அழித்து ஆக்குதல் என்று கொண்டு, construct -  என்ற கொள்கைக்கு உறுதுணையாக இருப்பதாகக் கொள்ளலாம்.

சாண்டோக்கிய உபநிஷத்தில் உள்ள ஆத்மாவைப் பற்றிய உரையாடல் இதற்கு தக்க சான்றாகும்.

ஒரு விதையை உடைத்துக் கொண்டே சென்று, இறுதியில், சிஷ்யன் சொல்வான்: குருவே, விதையில் ஒன்றுமே இல்லை.

ஆனால், குரு சொல்வார் - இல்லாத ஒன்றிலிருந்து எதுவும் பிறக்க முடியாது. உன் கண்களுக்குத் தெரியாவிடில், அதில் ஒன்றும் இல்லை என்றாகிவிடாது. அது தான் உன் கண்களுக்குத் தெரியாத சூட்சமம்.

தவறான எழுத்தை - வாக்கியத்தைச் சரிசெய்ய ரப்பர் கொண்டு அழிக்கிறோம். அதைப் போல் ‘கருத்துக் கட்டமைத்துக் கற்றலில்’ மூன்று நிலை உண்டு. கருத்துக்கள் மூன்று நிலைகளில் ஒருவரின் மனத்தில் நிகழும் - கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம். இதை சுருள் கம்பி தத்துவம் என்று சொல்வார்கள்.

கடந்த காலக் கருத்தை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தகுந்த கடந்த காலக் கருத்துக்களை மட்டும் நிகழ்கால கருத்தாக மனத்தில் நிறுத்திக் கொண்டு, மனத்தை வருங்கால கருத்துக்களை எற்க தயார் நிலையில் வைத்துக் கொள்ளும் உத்தியை ஒவ்வொரு பாடத்திற்கும் பயன்படுத்துவதுவது தான் இந்த தத்துவ முறையின் முதுகெலும்பாகும்.

கீழே உள்ள கதை ஒரு சிறு குழந்தை எழுதி தினத் தந்தியில் வெளியிடப்பட்டதாகும்.                    

பயம் மனிதனை முட்டாள் ஆக்கும்

ஆக்கம்: சந்திரசேகர் ராஜ், 10-ம் வகுப்பு, பெங்களூர்.

ஒரு இளைஞன் மரத்தில் ஏறி கனிகளைப் பறித்துத் தின்றான். கிளை நுனியில் இருந்த ஒரு கனியைப் பறிக்கும் போது, கிளை முறிந்து, கீழே விழாமல் ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். அவனால் வேறு கிளையைப் பற்றி, மரம் ஏறித் தப்பிக்க முடியவில்லை. தரையும் கீழே வெகு தூரத்தில் இருந்ததால், குதிக்கவும் முடியாமல் பயத்தினால், உதவிக்குக் கூக்கிரலிட்டான்.

அந்த வழியே வந்த ஒரு பெரியவர் ஒரு நொடியில் அவனின் நிலமையைப் புரிந்து கொண்டார். உடனே, ‘நான் உனக்கு உதவுகிறேன்’ என்று சொல்லி, ஒரு கல்லை அவன் மேல் எறிந்தார்.

கல் அவன் மேல் பட்டவுன், கோபமாக, ‘உதவச் சொன்னால், கல்லையா எறிகிறீர். அறிவில்லையா?’ என்று கோபமாகக் கத்தினான்.

பெரியவரோ பதில் ஏதும் பேசாமல், இன்னொரு சிறிய கல்லை மீண்டும் எறிந்தார். அதனால் கோபம் கொண்ட இளைஞன், ‘இதோ, கீழே இறங்கி வந்து உங்களை என்ன செய்கிறேன் பாரும்’ என்று தன் பலம் கொண்ட மட்டும் முயன்று, ஒரு கிளையைத் தாவிப் பற்றிக் கொண்டு, மரத்தின் மூலமாகக் கீழே இறங்கி வந்து பெரியவரைத் திட்டினான்.

‘கல்லை ஏன் எறிந்தீர்? இது தான் நீர் எனக்குச் செய்யும் உதவியா?’ என்று பெரியவரைப் பார்த்துக் கோபமாகக் கத்தினான்.

பெரியவர் அமைதியாகச் சிரித்துக் கொண்டே, ‘தம்பி, நான் உனக்கு உதவி தான் செய்தேன்’ என்றார்.

இளைஞனுக்குப் புரியவில்லை.

பெரியவர் விளக்கினார்: ‘நான் உன்னைப் பார்த்த போது, நீ பயத்தினால் உறைந்து போய் இருந்தாய். உன் மூளை வேலை செய்ய வில்லை. நான் உன் மேல் கல்லை எறிந்தவுடன், பயம் போய், என்னை நீ எப்படிப் பிடிப்பது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டாய். உடனே நீயாகவே காப்பாற்றிக் கொண்டு கீழே இறங்கி விட்டாய். உன்னை உன்னாலேயே காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று உன் அறிவுக்கு முதலில் புலப்படவில்லை. உன் பயம் உன்னை யேசிக்க விடவில்லை. அதைப் போக்கவே நான் இந்த உபாயம் செய்தேன்.”

பயம் இல்லாதவன் இமயமலையையும் எளிதாக ஏறுவான். பயம் இருப்பவனுக்கு சிறிய மேடும் மாமலைதான். எனவே பயம் காரிய சத்துரு.

 

‘Constructivism’ -  என்ற விதிமுறையை இந்தக் கதையைப் புரிவதற்குப் பயன்படுத்தலாம்.

கல் எறிவது தவறு என்பது பொதுவான கருத்து. அதன் அடிப்படையில்  ஒரு வழிப்போக்கர் கண்ணால் பார்ததை மட்டும் வைத்து - மூளையைப் பயன்படுத்தி பலவிதமான கருத்துக்களை ஒன்றன் பின்ஒன்றாக அடுக்கி ஆராயாமல் - கல் எறிபவர் செய்வது தண்டனை - உதவி அல்ல என்பது அந்தச் சிறுவனின் மனத்தில் உருவான கருத்தைப் போன்று தான் இந்தச் சம்பவத்தைப் பற்றியும் நினக்கக் கூடும்.

ஆனால், உண்மை நிலை என்ன? கல் எறிந்தது அந்தச் சிறுவனின் பயத்தைப் போக்குவதற்காகவே அன்றி, அந்தச் சிறுவனைத் தண்டிப்பதற்காக அல்ல என்பது பெரியவர் தமது மனநிலையை விளக்கிய பிறகு தான் வெளிப்படுகிறது. இதில் அந்தப் பெரியவரின் அனுபவம், அவரது தீர்க்க தரிசனம் முக்கிய பங்குவகிக்கிறது.

இதன் பிறகு, அந்தச் சிறுவன் மனத்திலும், வழிப்போக்கர் மனத்திலும் இந்தப் புதிய கோண கட்டுமானத்தில் எழும் கருத்துப் பதிந்து, ஆபத்தில் இருப்பவர்களை - அவர்களுக்குச் சிறிது துன்பம் - வலி - கொடுத்துக் காப்பாற்றும் உத்தி தெரியவரும். அதாவது, செய்கையை விட செய்பவர்களின் மனக் கருத்து தான் மிக முக்கியம் என்பது கட்டுமானக் கருத்து உருவாகும் போது தெரியவரும்.

‘கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர வீசாரிப்பதே மெய்’ என்பது இந்த கட்டுமானக் கற்றல் முறைக்கு ஒரு சூத்திரமாகவே கொள்ளலாம்.

என். என். பிரஹலாதா என்பவர் டெக்கான் ஹரால்ட் தினசரிப் பத்திரிகையின் ‘கல்வி’ என்ற இணைப்பு இதழில் ‘Constructive approach to teaching’ என்ற தலைப்பில் இந்த தத்துவத்தைப் பற்றி மிகவும் தெளிவாக ஒரு கட்டுரையை எழுதி உள்ளார். இந்த கட்டுமானக் கற்றல் முறை அந்த கட்டுரையில் நன்கு அலசி ஆராயப்பட்டுள்ளது. அதிலுள்ள பல கருத்துக்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். 

தற்போதைய கல்வி முறையில் ஆசிரியர்கள் பாடப்புத்தகத்தில் உள்ளவைகளை எந்தவிதமான புதுமையான வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கல்வியைப் போதிப்பதைத் தான் நாம் வகுப்பறைகளில் காண்கிறோம். இதனால் பல மாணவர்களுக்கு கற்பது என்பது வேம்பங்காயாகக் கசந்து, உற்சாகமற்ற நிலையை உருவாக்குகிறது.

தற்போதைய கல்வி கற்பிக்கும் நிலையில், ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர் என்ற நிலை மாறி, கற்க உதவுபவர் - Learning Facilitator - என்ற பதவியையும், குறைகளை கண்டு நிவர்த்தி செய்யும் மருத்துவர் -  Diagnosticism -  என்ற பதவியையும் வகிக்கும் நிலைக்கு உயர்ந்து விடுகிறார். இதனால் கல்வி கற்பிக்கும் முறையிலே ஒரு முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது. இதன் காரணமாக, ‘கற்றலுக்குக் கற்பித்தல்’ - Teaching to Learn - என்ற நிலையிலிருந்து, ‘கற்றலுக்கு உதவுதல்’ - ‘Facilitating to Learn’ -  என்ற நிலைக்கு ஆசிரியர் உயர்ந்து விட்டார்.

தகவல்களைக் குழந்தைகளின் மண்டையில் கல்வி என்ற போர்வையில் திணிப்பதால் உண்மையான கற்றல் நிகழாது என்பதை இப்போதைய ஆசிரியர்கள் உணர்ந்துள்ளார்கள். அதன் காரணமாக, பள்ளிகளிலும், பாடத்திட்டங்களிலும், பாடம் சொல்லிக் கொடுக்கும் வழி முறைகளிலும், ஏன், கல்விக் கொள்கைகளிலேயே பல மாற்றங்கள் நிகழத் தொடங்கி உள்ளன என்பது ஒரு மகிழ்ச்சிகரமான செய்தியாகும். நீண்ட பயணம் என்று முதல் அடியைக் கூட எடுத்து வைக்காமல் இருக்கும் நிலை மாறி, கல்வியாளர்களும் - அரசாங்கமும் - பள்ளிகளும் - ஆசிரியர்களில் சிலரும் - அந்த புதிய முறைக் கற்பித்தலுக்கு பாதை அமைக்கும் பணியைத் தொடங்கி விட்டனர் என்பது ஒரு நல்ல செய்தியாகும்.

அந்த பாதையின் முக்கிய இலக்கு - Constructivism - என்ற கல்வி கற்பிக்கும் வழி முறையாகும். இதை நாம் - ‘கருத்துக் கட்டமைப்புக் கற்றல்  முறை’ அல்லது ‘கட்டுமானவழியில் கருத்தை அமைத்துக் கற்றல்’ என்று மொழியாக்கம் செய்யலாம். இது தமிழ் வழிக்கற்பிக்கும் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஒரு புதுமையான வழிமுறையாகும்.

இந்த முறையில் ஆசிரியர்கள் மாணவர்களை முழுஅளவில் பாடங்களைக் கற்பதை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளை வெறும் பாடம் கேட்கும் ஒரு ஜடமாகக் கருதாமல், குழந்தைகளையே முன்னிலைப் படுத்தி, ஆசிரியர்கள் பின்னணியில் இருந்து செயல்படும் நிலைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். இந்த வகையான கற்றல் முறை வகுப்பறைகளில், மாணவர்கள் ஒரு சுமூகமான சூழ்நிலையில் தாங்களாகவே ஆசிரியர்களின் மேற்பார்வையில் பாடங்களைக் கற்பதால், அவர்களின் தன்னம்பிக்கையும், ஆர்வமும் பன்மடங்கு அதிகரித்து, கற்றவை அனைத்தும் மனத்தில் நன்கு பதிந்து, அந்தக் கற்றல் பாடங்கள் எல்லாம் அவர்களின் சொத்துக்களாக அமைந்து, அவர்களைத் சிறந்த  திறமைசாலிகளாக உருவாக்கி விடுகின்றன என்பது தான் இந்த பாடமுறையின் சிறப்பாகும்.

இந்த கருத்துக் கட்டுமான கற்றல் முறையில், ‘அறிவு உருவாதல்’ என்ற உயர்ந்த நிலை நிகழ்கிறதே அன்றி, ‘அறிவு மீண்டும் ஒப்பிக்கப்படுதல்’ என்ற மரபு வழிக் கல்வி கற்பித்தல் போல் நிகழ்வதில்லை என்பது ஒரு முக்கிய அம்சமாகும். இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணம் இது தான்: கட்டுமான கற்றல் முறையில், அறிவின் தன்மை மற்றும் மனிதர்கள் எப்படி கற்கிறார்கள் ஆகியவைகள் பற்றிய விளக்கங்களை அளிக்கும் ஒரு அர்த்தமுள்ள விதியை ஏற்படுத்தி விடுகிறது.

கருத்துக் கட்டுமான கற்றலில் ஆய்வின் அடிப்படையில் அமைந்த சிந்தனையை ஊக்குவித்து, ஆர்வம் மற்றும் சுதந்திரம் ஆகிய பண்புடைய கற்பவர்களை உருவாக்குகிறது.  இந்தக் கொள்கையால், ஒரு மாணவன் தான் முன்பே தெரிந்த அறிவின் அடிப்படையில் தான் கற்றல் கட்டிடத்தை எழுப்புகிறான் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மையாகும். அந்த மாணவன் மனத்தில் உள்ள முன்பே தெரியும் அறிவை ஒரு சுருக்கமான குறிப்பு - schema - என்று அழைக்கலாம். இந்த முன்பே மனத்தில் உள்ள கருத்துக் குறிப்புக்கள் மூலம் தான் எல்லா கற்றலும் வடிகட்டப்படுகின்றன. கட்டுமான கற்றலை ஆதரிப்பவர்கள், கற்றல் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமைவதற்கு, மாணவன் கற்பதின் வழிமுறையில் மும்முறமாக ஈடுபடுவதில் இருக்குமே அல்லாது அறிவை எந்தவித புரிதலும் இன்றி ஜடமாகக் கேட்பதில் இல்லை.

கருத்துக் கட்டுமான கற்றலில் ஆசிரியர் நேரிடையாக மாணவர்களுக்கு கற்பிப்பதில்லை. கேள்விகள் மற்றும் பயிற்சிகள் மூலம் மாணவர்களை அவர்களே விவாதித்து, கண்டுபிடித்து, விமரிசனம் செய்து கற்கும் படி ஆசிரியர்கள் வழிகாட்ட முயலும் முயற்சியில், மாணவர்கள் புதிய அறிவினைப் பெறமுடிகிறது.

கருத்துக் கட்டுமான கற்றலின் முக்கிய பண்புகளை இங்கே இப்படிப் பட்டியலிடலாம்:

 • கற்றல் என்பது ஒரு உயிரோட்டமுள்ள கருத்துக் கட்டுமான வழிமுறையாகும்.
 • காதால் கேட்டு கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொண்டு அனுசரித்துச் செல்லும் மரபு வழி முறையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.
 • கருத்துக் கட்டுமான கற்றலின் மூலம் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வு காணமுடியும்.

புதியவைகளைக் கற்றல் என்பது எப்பொழுதும் முன்பு பெற்ற அறிவைச் சார்ந்தே அமைகிறது. இதனால், புதிய தகவல்களை நாம் அறிவதற்கு இதுவே ஒரு தடங்கலாகி விடுகிறது. ஆகையால் கற்றல் என்றால் நம் மனத்தில் உள்ள முந்தைய கருத்துக்களின் அமைப்புகளைச் சீரமைக்க வேண்டும் என்பதாகிறது. மேலும், கற்றலுக்கு சமூகத் தாக்கம் உதவிசெய்து, அதன் மூலம், தகுந்த கற்றல் பயிற்சிகளின் மூலமாக ஒரு சிறந்த கற்றல் நிகழ்வதை நாம் காணலாம்.

கருத்துக் கட்டமைப்புக் கற்றல் என்பதில் கற்பித்தல் - கற்றல் முறைகளில் ஒரு பெரிய மறு சிந்தனை செய்ய வேண்டிய கால கட்டத்தில் நாம் இருக்கிறோம். இதன் மூலம், பாடத் திட்டம் மற்றும் விதிகள் ஆகிய இரண்டிலும் ஒரு நிரந்தர மாற்றத்திற்கான தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் காரணமாக, கற்றல்-கற்பித்தல் இரண்டிலும் ஒரு புதிய கொள்கையை இது ஏற்படுத்தி உள்ளது.

இந்தப் புதிய கொள்கையை கடைப்பிடிக்க ஒரு பெரிய மாற்றம் கல்வி முறையில் கொண்டு வரவேண்டும். கீழ்க்கண்ட வழிகளில் அந்த மாற்றத்தினைச் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது:

 • ஆசிரியரை முன்னிலைப் படுத்தி, ஒரே நிலையான பழைய முறை பாடத் திட்டத்திலிருந்து மாறுபட்டு, கற்பவரை முன்னிலைப்படுத்தும் நிலைமைக்கு ஏற்ற கல்வி முறை.
 • ஆசிரியர் வழிகாட்டல் - முடிவுகள் ஆகியவைகளிலிருந்து, கற்பவரின் சுதந்திரமான சூழ்நிலைக்கு வழிவகுத்தல்.
 • ஆசிரியர் வழிகாட்டியும், மேற்பார்வை செய்தும் கல்வி பயிலும் சூழ்நிலையிலிருந்து, மாணவர்களை ஊக்கப்படுத்தி, உதவி செய்து கற்றலுக்கு வழிவகுத்தல்.
 • காதால் கேட்டு மனனம் செய்து படிக்கும் நிலையிலிருந்து, கற்றலில் திறம்பட பங்குகொண்டு செயல்பட வழிவகுத்தல்.
 • நான்கு சுவர் வகுப்பறையில் பாடம் கற்பதிலிருந்து விடுபட்டு, பரந்த சமூகச் சூழ்நிலைக்கு ஏற்ப கற்றலை விரிவுபடுத்தல்.
 • அறிவை நிலையான ஒன்றாக நினைத்து கற்பிக்கும் நிலையிலிருந்து, அறிவை வளரவிட்டு, உருவாக்கும் நிலையை ஏற்படுத்துதல்.
 • ஒரே பாடத்தையே சொல்லிக் கொடுக்காமல், பல் முனைப் பாடங்களைக் கற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துதல்.

இந்த கருத்துக் கட்டமைப்புக் கற்றலில், ஆசிரியர்கள் கீழ்க்கண்டவைகளை செயல்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.

 1. கவனிப்பு
 2. சந்தர்ப்ப சூழ்நிலையை அறிதல்
 3. அறிவு சார்ந்தவைகளை பயிலல்
 4. இணைதல்
 5. விளக்கமளித்தல்
 6. பல்முனை விளக்கம் மற்றும் பல்முனை தெளிதல்.

கருத்துக் கட்டுமான அறிதல் முறை இரண்டு முக்கிய கொள்கைகளை ஆதாரமாகக் கொண்டுள்ளது.

 1. முதல் கொள்கை: அறிவு என்பது ஒருவரால் எந்த எதிர்ப்புமின்றி பெறும் வெறும் பாடமல்ல. அறிவைப் புகட்டும் பாடத்தின் அடித்தளத்தில் மிகவும் கவனமாகக் கட்டப்படும் அறிவுக் கட்டடமாகும். கருத்துக்கள், சிந்தனைகள் - ஆகியவைகளை பிறருக்கு அறியும் வண்ணம் வெளிப்படுத்துவது என்பது எளிதானது அல்ல. ஏனென்றால், அவைகளில் பொதிந்துள்ள உண்மைகள் எல்லாம் எழுத்துக்களாகவும், வாக்கியங்களாகவும் தான் பிறருக்கு அனுப்ப முடியும். ஆகையால், அதைப் பெறுபவர் அந்த எழுத்துக்கள்- வாக்கியங்களை கட்டவிழ்த்து, அவைகளின் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன் காரணமாக, நாம் எவ்வளவு முயன்றாலும், மாணவர்களின் தலையில் கருத்துக்களைத் திணிக்க முடியாது. மாணவர்கள் தான் அவர்களாகவே அர்த்தங்களை உருவாக்கி அறிந்து கொள்ள வேண்டும். அதாவது கருத்துக் கட்டமைப்புக் கற்றல் முறைப்படி கல்வி கற்கவேண்டும்.

பொதுவாக ஒருவர் சொல்வதின் அர்த்தம் முழுவதும் கேட்பவர்களுக்கு அதே சொல்பவர்கள் நினைத்ததைப் போல் நிகழ்வதில்லை. அவர்களது சொற்கள் ஒவ்வொருவருக்கும் பலவிதமான அர்த்தங்களை உண்டாக்கும். ஆனால், கருத்துக் கட்டமைப்பு கற்றல் முறையில் தான், ஒருவர் சொல்ல நினதத்தைச் சரியாக அறியும் நிலை உருவாகும்.

 1. இரண்டாம் கொள்கை: அறிவுத் திறன் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபட்டு, உலக அனுபவத்திற்கு உறுதுணையாக உள்ளது. இதன் மூலம், நமக்கு உண்மை நேரிடையாகக் கிடைப்பதில்லை. நமது அனுபவங்களின் அடிப்படையில் உருவாகும் விளக்கங்களை வைத்து உண்மையை உண்டாக்கி அறிதல் வேண்டும்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மரபுக் கல்வியில் இடது புற மூளையை மட்டும் பயன் படுத்தி, வலது புற மூளையை புறக்கணித்து விடுகிறோம். இடது புற மூளை மனனம்  செய்து ஞாபக சக்திக்கு உதவும். இது மரபுக் கல்வியில் மூலாதாரம். ஆனால், நவீன கல்வியில் வலது மூளையின் சக்திகளான - சிந்தனை, கற்பனை - ஆகியவைகளை வளமாக்கி உரமிட்டு புரிதலுடன் கற்றல் என்ற உன்னத நிலைக்கு வித்திட்டு கல்விக் களத்தை திறமைக் கல்வியாக உயர்த்தி, தொழில் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் தகுதிக்கு கற்பவர்களை உருவாக்கிவிடுகிறது. என்றாலும், மூளையின் இடது - வலது ஆகிய இரண்டு பகுதிகளையும் புறக்கணிக்காமல் ஒரு சமநிலை நோக்குடன் கல்வி கற்றலின் அனுகுமுறை அமைய வேண்டும் என்பதே இன்றைய கல்வியாளர்களின் கருத்தாகவும், கொள்கையாகவும், செயல் திட்டமாகவும் இருப்பது நமது கல்விமுறை சரியான பாதையில் செல்வதை நாம் அனைவரும் உணர்ந்து ஊக்கம் பெறலாம்.

இந்தக் கருத்தைக் கருவாகக் கொண்ட குழந்தைகளுக்கான மூளையைப் பற்றிய ஒரு கவிதையோடு பூர்த்தி செய்கிறேன்.

மூளை

இடது இடது

மூளையின் இடது

காது கேட்டு

இடத்தை நிரப்பும்

நினைத்த போது

வாய் வழி கொட்டும்

மனத்தில் ஒட்டா

பாடத் தேர்வில்

மதிப்பெண் பெறலாம்

மதிப்பெண் மட்டும்

மதிப்பைத் தருமா?

 

வலது வலது

மூளையின் வலது

ஆய்ந்து அறிந்து

சிந்தித்து சீர்தூக்கி

கற்பனைக் களமாகி

கனிமனம் மகிழ

மதிப்பெண் மாயை மறைந்து

மதிப்போடு வாழ்வில்

வெற்றி நடை போடும்

மர்மம் தான் என்ன?

 

மூளையின் -

இடத்திற்கு இடம் கொடுப்போம்

வலத்திற்கு வலிமை சேர்ப்போம்

வாழ்விலே வெற்றி காண்போம்.

 

 

 

18923 registered users
7393 resources