கங்கை நதி

அறிமுகவுரை

கங்கை மிகவும் புனிதமான நதி. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரமாகவும் விளங்குகிறது. உண்மையில், கங்கைச் சமவெளி உலகத்திலேயே அதிக மக்கள் வசிக்கும் சமவெளியாகும். துரதிர்ஷ்டவசமாக உலகிலேயே அதிக மாசுபடிந்த ஐந்து நதிகளில் ஒன்றாக கங்கையும் உள்ளது. இங்கு தரப்பட்டுள்ள கதை, கங்கை எப்படி இந்த பூமிக்கு வந்து நதியாகப் பாயத்துவங்கியது என்பது பற்றியும் அதன் தொடர்புடைய சில நம்பிக்கைககள் பற்றியும்தான்.

கங்கை நதி

கதை மற்றும் சிறு தகவல்கள்

வேதங்களிலும், புராணங்களிலும், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்களிலும் கங்கை நதி பற்றி மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கங்கையும் பாலி அரசரும்

மகாவிஷ்ணு இந்த உலகில் பத்து  வடிவங்களில் (தசாவதாரம்) வெவ்வேறு காலகட்டங்களில் தோன்றியிருக்கிறார். ஒவ்வொரு அவதாரத்தின் போதும் அவர் பூமியில் நிலவி வந்த தீமைகளையும், துயரங்களையும் போக்க உதவியிருக்கிறார். அப்படி அவர் எடுத்த ஒரு அவதாரமே வாமன அவதாரம். அந்த அவதாரத்தில் அவர் குள்ள வடிவுள்ள ஒரு பிராமணராகத் தோன்றி இந்த பூமிக்கு வந்தார்.

பாலி சக்கரவர்த்தி ஒரு பலம் பொருந்திய பணக்கார அசுர மன்னராக வாழ்ந்து வந்தார். அவரிடம் குதிரைகளும், யானைகளும், ரதங்களும், குதிரைப்படைகளும், தரைப்படைகளும் இருந்தன. அவர் மகாவிஷ்ணுவின் சிறந்த பக்தர்.  இதனால் அவருடைய சக்தியும் பல மடங்கு அதிகரித்து வந்தது. இதைக்கண்டு தேவர்களின் அதிபதியான இந்திரனுக்கு, “ எங்கே நாம் வாழ்ந்து வரும் சொர்க்கத்தை பாலிச் சக்ரவர்த்தியிடம் இழந்து விடுமோ? “ என்கிற பயம் வந்தது. இந்திரன், மகாவிஷ்ணுவைச் சந்தித்து அவருடைய உதவியை நாடினார். பெரிய யாகங்கள் நடக்கும் போது மற்ற அரசர்கள் போல பாலியும் பிராமணர்கள் என்ன கேட்டாலும் தயங்காமல் தானம் கொடுப்பார். மகாவிஷ்ணு வாமன - அதாவது குள்ள பிராமணர் - வேடம் தரித்து பாலி சக்கரவர்த்தியிடம் சென்றார். வந்திருப்பது மகாவிஷ்ணுதான் என்று அரசருக்கும் தெரியும். அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அவருடைய குருவான சுக்ராச்சாரியர் வந்திருப்பவர் மகாவிஷ்ணு எனபதை அறிந்து அரசருக்கு எச்சரிக்கை செய்தார். சொன்ன சொல் தவறாத அரசரோ அந்த குள்ள பிராமணருக்கு முன் தலை வணங்கி அவர் வேண்டியதைக் கேட்டுப் பெரும்படி கூறினார். பிராமணர் தனக்கு மூன்று அடி நிலம் வேண்டுமென்று கேட்டார். அதற்கு உடனடியாக அரசரும் சம்மதித்து அவரையே அளந்து கொள்ளும்படி கூறினார். அதற்குப் பிறகுதான் அந்த மாயாஜாலம் நடந்தது. அந்த குள்ள பிராமணர் திரிவிக்ரமனாக விஸ்வரூபம் எடுத்தார். ஒரு அடியில் அவர் பூமியை அளந்தார். இரண்டாவது அடியில் வானத்தை அளந்தார். மூன்றாவது அடி வைப்பதற்கு இடம் எதுவுமில்லை. எனவே அரசர் பாலி தனது தலையைக் கொடுத்தார். பாலியின் தலையில் மகாவிஷ்ணு தமது பாதத்தை வைத்ததும், பாலி கீழ் உலகம் என சொல்லக்கூடிய பாம்புகளும், அரக்கர்களும் வாழும் பாதாள உலகத்திற்குத் தள்ளப்பட்டார். அங்கே திரிவிக்ரமனின் பாதம் வானத்தை அளந்தபோது, பிரம்மா அவருடைய காலைக் கழுவி (அது விஷ்ணுவின் விஸ்வரூபம் என்பதால்) அந்தத் தீர்த்தத்தை தமது கமண்டலத்தில் பிடித்து வைத்துக் கொண்டார். அந்த புண்ணிய தீர்த்தமே பிரம்மாவின் மகளான கங்கை நதியாகும்.

கங்கை இமாயவன் மகள் என்றும், உமா தேவியின் சகோதரி என்றும் கூறப்படும் பழங்கதையும் உண்டு. கடவுள்களை சாந்தப்படுத்த கங்கையை தேவேந்திரன் சொர்க்கத்திற்குக் கொண்டு சென்றான் என்றும் கூறப்படுகிறது.

துர்வாசரின் சாபம்

பிரம்மாவின் வளர்ப்பில் கங்கை மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டு வளர்ந்து வந்தாள். பழங்கதையொன்றின் படி, முனிவர் துர்வாசர் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர் கட்டியிருந்த ஆடைத் துணியை காற்று அடித்துச் சென்று விட்ட்து. அந்த நேரத்தில் அங்கிருந்த கங்கை அதைப்பார்த்தவுடன் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிரிக்க ஆரம்பித்தாள். அதனால் கோபமுற்ற துர்வாசர், சிறுமி கங்கையைப் பார்த்து “ பூமியில் நதியாக மாறி உன் வாழ்நாளை பூமியில் ஓடிக் கழிப்பாய். மக்கள் தங்களைப் புனிதமாக்கிக் கொள்ள அந்த நதியில் குளிப்பார்கள் “ என்று சாபமிட்டார்.

கங்கை பூமிக்கு எப்படி வந்தாள்?

சாகர் என்கிற அரசர் “தான் மிகவும் சக்திவாய்ந்தவராக வேண்டும்” என்பதற்காக குதிரையைப் பலி செய்யும் யாகம் (அஸ்வமேத யாகம்) ஒன்றைச் செய்தார். இதைக் கேள்விப்பட்ட தேவர்களின் அரசனான இந்திரன் “எங்கே தான் தனது சொர்க்கப் பதவியை இழந்து விடுவோமோ?” என்கிற அச்சத்தில் நடுநடுங்கிப் போனான். அவன் சாகரின் அஸ்வமேத குதிரையைத் திருடி அதை முனிவர் கபிலர் வாழ்ந்த ஆசிரமத்திலிருந்த மரம் ஒன்றில் கட்டி வைத்தான்.

குதிரையைக் காணாததால், அரசன் சாகரின் 60,000 புதல்வர்கள் அதைத் தேடிப் புறப்பட்டனர். அப்பொழுது குதிரை முனிவர் கபிலரின் ஆசிரமத்தில் இருப்பதைக் அவர்கள் கண்டுபிடித்தனர். அவர்தான்  குதிரையைத் திருடியிருக்க வேண்டுமென்றெண்ணி அதை விடுவிக்க முயற்சி செய்தனர். இந்த சத்தம் தியானத்திலிருந்த முனிவருக்கு இடைஞ்சலாக இருந்தது. தான் தான்  குதிரையைத் திருடிவிட்டதாக அவர்கள் நினைக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்ட முனிவர் மிகவும் கோபங்கொண்டார்.  கோபத்துடன் அவர் பார்த்த பார்வையிலேயே சாகரின் புதல்வர்கள் 60,000 பேரும்  எரிந்து சாம்பாலாகிவிட்டனர்.

இறந்தவுடன் செய்யவேண்டிய ஈமச் சடங்குகள் முடிவதற்கு முன்பே அவர்கள் எல்லோரும் எரிந்து சாம்பலாகி விட்டனர். எனவே, அவர்கள் பேய்களாக அலைந்தனர். அவர்களில் தப்பிப்பிழைத்த  ஒரு சகோதரன், அன்சுமன் என்பவன்,  “ என்ன சடங்கு செய்தால் இந்த பேய்களான எனது சகோதரர்கள் எல்லோரும்  சொர்க்கத்திற்கு செல்ல முடியும் ? “ என முனிவரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அதற்கு முனிவர், “ புனிதமான கங்கையில் அவர்கள் சாம்பலைக் கரைத்தால் சடங்குகள் முடிவடையும் “ எனக் கூறினார். “ கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டுமெனில் பிரம்மாவை நினைத்து வழிபட வேண்டும் “ என்றும் முனிவர் விளக்கிக் கூறினார்.

அதன்பின் பல தலைமுறைகளுக்குப் பிறகு,  அரசன் சாகரின் வம்சாவழியில் வந்த பகீரதன் பல ஆயிரம் ஆண்டுகள் மிகவும் கடுமையாகத் தவம் புரிந்தான். இதைக் கண்டு மனமிரங்கிய பிரம்மா அவன் வேண்டுகோளை ஏற்று கங்கையை பூமிக்குச் செல்லுமாறு பணித்தார். கங்கை மிகவும் உறுதியும், சக்தியும் கொண்ட நதியாகும். அவள் தான் வரும் வழியில் தென்படும் எல்லாவற்றையும் அழித்தொழிக்கத் திட்டமிட்டிருந்தாள்.  இதையறிந்த சிவபெருமான் அவளை தமது ஜடாமுடியில் சிறைப்பிடித்து  அவள் வேகத்தைக் கட்டுப்படுத்தி  விட்டார்.

பகீரதன் சிவனை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. சிவன் கொஞ்சம் கொஞ்சமாக தமது பிடியிலிருந்து கங்கையை விடுவித்தார். அப்படி கீழே பாய்ந்து வரும்போது அவள் பாகீரதியாக வந்தாள். அவள் பாய்ந்து வரும்போது முனிவர் ஜாங்னுவின் ஆசிரமத்தைச் சூழ்ந்தாள். இதனால் கோபமடைந்த அவர் அவளை தடுத்து நிறுத்தினார். மீண்டும் பகீரதன் அவளை விடுவிக்குமாறு முனிவரிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டான். அவ்வாறு விடுதலைப் பெற்று வந்த கங்கை இப்பொழுது ஜாங்னவியாக வந்தாள். கங்கை வருவதையறிந்த மக்கள் அதில் புனித நீராடி தங்களது பாவங்களையெல்லாம் போக்கிக் கொண்டனர்.

கங்காதேவி

கங்கை எப்பொழுதும் கடவுளாகத்தான் போற்றப்பட்டு வருகிறாள். பாதிக்கப்பட்ட ஒரு மனிதனின்  சாபத்தாலோ அல்லது வேண்டுகோளாலோ  அவள் பூமிக்கு வந்து சேர்ந்தாலும்  அவளை நம்பியவர்களுக்கு அவள் வழிப்பாட்டுக்குரிய கடவுளாகவே போற்றப்படுகிறாள்.   அவளின் உருவம் கடவுள் அம்சம். அவள் நான்கு கைகளுடனும், மூன்று கண்களுடனும் ( இவை கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தைப் பார்ப்பதற்கானவைகள் ), முழு ஆபரண  அலங்காரத்துடனும்,  பிறைச் சந்திரன் கிரீடமாகச் சிரசை அலங்கரிக்க ஒரு கையில் தாமரைப் பூவையும், மற்றொரு கையில் நகைகள் நிரம்பிய  செம்பையும் ஏந்தி காட்சி அளிக்கிறாள்.  அவள் பட்டுச் சேலை அணிந்து, எருதுவின் வாலின் முடியால் ஆன சாமரத்தால்  ஒரு பெண் வீச, மற்றொரு பெண் தலைக்கு மேல் வெண் கொற்றக்குடையைப் பிடித்தபடி இருக்க கங்கை காட்சியளிக்கிறாள். அவள் முதலையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். இப்பிராணி பாதி முதலை உருவமும், மீதி மீன் வடிவும் கொண்ட ஒரு புராண உயிரினம் ஆகும். கங்கையின் நதியின் நீரோடைகள் சொர்க்கத்திலும், நரகத்திலும், பூமியிலும் பாய்கின்றன.

மகாபாரதத்தில் கங்கை

காமதேனு ஒரு தெய்வீகப் பசு. அது அதன் சொந்தக்காரருக்கு அவர் கேட்பதையெல்லாம் கொடுக்கும் வரம் பெற்றது. அது பசுக்களுக்கெல்லாம் தாய் போன்றது. வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தில் அது இருந்தது. அவருடைய யாகத்திற்கு வேண்டிய பொருட்களையெல்லாம் அது வழங்கி வந்தது.

வாசுக்கள் என அழைக்கப்படும் எட்டுக் குட்டித் தேவர்கள் தங்கள் தேவிமார்களுடன் வசிஷ்டரைத் தரிசிக்க வந்திருந்தார்கள். அவர்கள் தேவியரில் ஒருத்திக்குக் காமதேனுவைக் கவர்ந்து செல்லவேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. அவள் விருப்பத்தையறிந்த அவள் கணவன் வாசு, காமதேனுவை திருட்டுத் தனமாகக் கவர்ந்து சென்றார். இதை அறிந்த வசிஷ்டர் கோபமடைந்தார். அதற்குத் தண்டனையாக தேவர்கள் அனைவரும் பூமியில் பிறக்க வேண்டும் என சாபமிட்டார்.

தேவர்கள தங்களை மன்னிக்குமாறு  முனிவரிடம் வேண்டினர். அதற்கு அவர் மனமிரங்கி திருட்டுக்குக் காரணமாக இருந்த வாசு மட்டும் பூமியில் பிறந்து அதிகநாட்கள் வாழ வேண்டுமென்றும், அப்படி அங்கு வாழும் காலத்தில் அவர் மிகவும் சிறப்பு வாய்ந்த மனிதராக விளங்குவார். என்றும் கூறினார். ஆனால், மற்ற எழுவரும் அவர்கள் பூமியில் பிறந்த ஒரு வருடத்திலேயே சொர்க்கத்திற்குத் திரும்பிவிடலாம் என்றும் கூறினார். இதை உணர்ந்த அவர்கள், கங்கையிடம் சென்று தங்கள் எல்லோரையும் அவளுடைய குழந்தைகளாக்கிக் கொள்ளவேண்டும் என வேண்டி கேட்டுக் கொண்டனர். அதற்கு அவளும் சம்மதித்தாள். அஸ்தினாபூரைச் சேர்ந்த அரசன் சந்தனு ஒரு நாள் கங்கைக் கரையில் ஒரு அழகான பெண்ணைப் பார்த்து அவள் மேல் காதல் கொண்டார். அவள் தன்னை மணந்து கொள்ளும்படி வேண்டினார். அந்த அழகியான கங்கை அவருடைய மனைவியாக இருப்பதற்கு விரும்புவதாக மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

ஆனால் அவள் தன்னுடைய செயல்கள் எதற்கும் அவர் கேள்வி கேட்கக் கூடாது என ஒரு நிபந்தனை போட்டாள். அவர்கள் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். ஆனால், கங்கையிடம் ஒரு விநோதமான பழக்கம் இருந்தது. அது என்னவெனில், தனக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் நீரில் வீசி எறிந்து வந்தாள் . சாந்தனு ஏழு முறை அவர்களுடைய குழந்தைகள் நீரில் மூழ்கி மாய்வதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தார். ஆனால் எட்டாவது முறை அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை.

அவர் அவளிடம் “ ஏன் நமது எட்டாவது குழந்தையையும் நீரில் மூழ்க விட்டுக் கொல்ல முயல்கிறாய் ? ”  எனக் கேட்டார். அவள் சிரித்துக் கொண்டே அவர் கையில்  அந்தக் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சொர்க்கத்திற்குப் போய்விட்டாள். அப்படிச் செல்வதற்கு முன், அவள் தனக்குப் பிறந்த குழந்தைகள் எல்லாமே வாசுக்கள் என்றும், அவர்களை நீரில் மூழ்கச் செய்ததினால் அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டார்கள் என்றும், இந்த எட்டாவது குழந்தை சந்தனுவைப் பார்த்துக் கொள்ளுவான் என்றும், மிகவும் புகழ்வாய்ந்த மனிதனாக – (பீஷ்மர்) – விளங்குவான் எனக்கூறி மறைந்தாள்.

பீல் வம்சத்தவரிடம் வழங்கும் கதை

பீல் வம்சத்தவர்களிகளின் மத்தியில் சொல்லப்படும் ஒரு சுவராசியமான கதை ஒன்று உண்டு. அது மகாபாரதக் கதையிலிருந்து முற்றிலும் மாறானது. காலங்காலமாக வாய்மொழியாக  வழங்கி வருவதாகும். பீல் சமூகத்தினர் வெவ்வேறு மாநிலங்களில் வசித்து வந்தாலும் மத்திய இந்தியாவிலிருந்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

ஒரு தவளை கங்கையை நோக்கி தனது புனித யாத்திரையை ஆரம்பித்தது. வழியில் ஒரு மாட்டுக் கூட்டம் அதை மிதித்துக் கொன்றுவிட்டது. அந்த தவளையின் உயிர் ஒரு பெண்மணியின் வயிற்றில் நுழைந்து அவளுடைய மகனாக பிறந்தது. அந்த மகன் பின்னர் இந்திரனிடம் வேலை பார்க்கச் சென்றான். அங்கு நன்றாக வேலை பார்த்தபிறகு அங்கிருந்து கிளம்பினான். தேவேந்திரன் சம்பளமாக அவனுக்கு வண்டி நிறையத் தங்கம் கொடுத்தான்.

மீண்டும் அவன் கங்கையை நோக்கி ஒரு  புனித யாத்திரை மேற்கொண்டான். செல்லும் வழியில், அவன் வண்டியில் பூட்டப்பட்டிருந்த எருது இறந்து விட்டது. அவன் சூரியக்கடவுளிடம் உதவி வேண்டி பிரார்த்தித்தான். சூரியனும் அவனுக்கு உதவி செய்தார். ஆனால் அதற்காக அவர் அவனிடமிருந்து வண்டியில் இருந்த தங்கத்தில் பாதியைக் கேட்டார். அவனும் அதற்கு சம்மதித்தான். சூரியக்கடவுளும் எருதை உயிர் பிழைக்கச் செய்தார். அவனோ கங்கையில் புனித நீராடிய பிறகு தன்னிடம் இருந்த அனைத்து செல்வத்தையும் ஆற்றில் போட்டுவிட்டான். திரும்பும் வழியில்  சூரியக்கடவுள் தனது பங்கை அவனிடம் கேட்டார். ஆனால் அவனால் எதுவும் கொடுக்க முடியவில்லை. இதனால் அவனை சூரியக்கடவுள் நரியாக மாற்றிவிட்டார்.

அந்த நரி கங்கைக் கரையின் ஓரத்தில் இருந்த ஒரு காட்டில் வசித்து வந்தது. ஒரு நாள் அழகான கங்கையைப் பார்த்த அது தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டது. கங்கை அதனுடைய தைரியத்தைப் பார்த்து சிரித்துவிட்டு தன் வழியில் ஓடியது. நரி கங்கையை மீண்டும் தொந்தரவு செய்த போது, அவள் அதன் மீது ஒரு கல்லை வீசியெறிந்தாள். இதனால் அதற்கு கண்ணில் அடிபட்டது. அடிபட்ட நரி கங்கையை விரட்ட ஆரம்பித்தது. கங்கை ஓடிப் போய் குரு சர்சங்கருக்குப் பின்னால் மறைந்து கொண்டாள். நரியைப் பார்த்த குரு அதை எரித்துச் சாம்பலாக்கி அந்த சாம்பலை அவளிடம் கொடுத்து ஆற்றில் போட்டு விடும்படி கூறினார். அப்படி அவள் அவ்வாறு செய்த போது அந்த சாம்பல் அவளிடம், “ நீ என்னை உன் கணவனாக எண்ணியே இவ்வாறு செய்கிறாய் “ என்று கூறிற்று. 

கொஞ்ச காலத்திற்குப் பிறகு கங்கை பாதாள உலகத்திற்கு மீண்டும் திரும்பினாள். ஆற்றங்கரையில் நீரின் அருகாமையில் நீரை தொடும் அளவில் தாழ்வாக  சாம்பல் ஒரு மரமாக வளரத் தொடங்கியது. மறுபடியும் அது கங்கையிடம் “ நான் உன்னை என் மனைவி போல கட்டித்தழுவி கொள்ள முடியும் “ என்றது. இதனால் கோபமடைந்த கங்கை அதை தண்ணீருக்கு அப்பால் தூக்கி வீசியெறிந்தாள்.

பனிரெண்டு வருடங்களாக கரையில் தூக்கி எறியப்பட்ட மரம் காய்ந்து விட்டது. பிறகு குரு சர்சாங்கர் அங்கு வந்து அந்த மரக்கட்டையில் தீ மூட்டினார். அப்பொழுது அதிலிருந்து சந்தனு அவதரித்தார்.

அவர் குருவோடு சேர்ந்து சென்றார். சந்தனு வில்லையும், அம்பையும் எடுத்துக் கொண்டு ஆங்காங்கேயுள்ள  பறவைகளையும், விலங்குகளையும் வேட்டையாட ஆரம்பித்தார். குரு சந்தனுவிடம் “இது பாவம். கொல்வதை நிறுத்து” என்று அறிவுரை கூறினார். ஆனால் வைராக்கியமாக சந்தனு. “நான் கங்கையைத் திருமணம் செய்து கொள்ளும் வரை கொல்வதைத் தொடர்ந்து செய்து கொண்டுதான் இருப்பேன்” என்று கூறிவிட்டார்.

இதன் பின் குரு கங்கையை அழைத்து சாந்தனுவை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். அவளும் சம்மதித்தாள். ஆனால் தங்களுக்குப் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும் கங்கையாற்றில் அவர் தூக்கியெறிந்துவிட வேண்டுமென்று நிபந்தனை போட்டாள். சந்தனுவும் அதற்கு சம்மதிக்கவே அவர்களின் திருமணம் அவருடைய பல பிறப்புகளுக்கும் சோதனைகளுக்கும் பிறகு நிறைவேறியது. அவர்கள் மேக  அரண்மனைக்குச் சென்று அங்கு வசிக்க ஆரம்பித்தனர். அவர்களுக்கு மூன்று மகன்கள் பிறந்தார்கள். ஆனால் ஒவ்வொரு தடவையும் பிறந்தவுடனேயே அவர்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் மீண்டும் ஒரு மகள் இளவரசி பிறந்த போது சந்தனு அவளை தனக்கு நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரிடம் பாதுகாக்குமாறு கொடுத்தார். இது பற்றி கங்கை கேட்டபோது, அவளிடம் சந்தனு பொய் சொன்னார். அதனால் அவள் மனம் சங்கடப்பட்டது. அவள் மூன்று முறை கைதட்டி மூன்று இளவரசர்களை உருவாக்கினாள். ஆனால் இளவரசி வரவில்லை. சந்தனு தன்னிடம் பொய் சொன்னதால் அவருடன் தான் செய்து கொண்ட திருமணத்தை முறித்துக் கொண்டு அவரிடமிருந்து விலகிச் செல்வதாகக் கூறி மறைந்தாள்.

சிறு தகவல்கள்

1. தென் இமாலயத்தில் உள்ள கங்கோத்திரி என்கிற பனிக்கட்டிப் பாளத்திலிருந்து உற்பத்தியாவதுதான் கங்கை நதி.

2. கங்கையின் நுழைவாயிலில்தான் உலகத்தின் பெரிய கழிமுக நிலமான (டெல்டா) சுந்தரவனம் இருக்கிறது

3. ஃபராக்கா -  ஹரித்துவார் போன்ற இரண்டு பெரிய அணைக்கட்டுகள் கங்கை ஆற்றின் மேல்தான் கட்டப்பட்டுள்ளன.

4. கங்கை என்றும், கங்கை நதிகள் என்றும் இந்த நதி அழைக்கப்படுகிறது.

5. பிரம்மபுத்திராவுடன் இணைந்த கங்கை நதிப் பகுதி டால்பின்களின் இருப்பிடமாகும். உலகில் மாசுபடாத நீரில் காணப்படும் நான்கு வகை டால்பின் வகைகளில் இதுவும் ஒன்று. இந்த டால்பின்கள் புதுமையானவை. ஏனென்றால் இவைகளுக்கு கண் தெரியாது. பார்வைக்கு அவசியமான விழி லென்ஸ்சுகள் அவைகளுக்குக் கிடையாது.

6. கங்கை நதி மிகவும் மாசு படிந்துள்ளது. இந்த நதி உற்பத்தியாகும் இடத்திலேயே மனிதர்களால் அசுத்தமடைகிறது

7. இந்த நதிக்கு வழக்கத்திற்கு மாறாக ஆக்ஸிஜனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. இதனால் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்ய முடிகிறது..

8. மாசுபடிந்த கங்கையை சுத்தம் செய்ய பல செயல்திட்டங்களை உருவாக்கினாலும் இது வரை அவ்விஷயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

9.  உண்மையில் அறிவு பூர்ணமாகப் பார்க்கும் பொழுது,   இந்த நதி பாயும் பல இடங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல. எனினும் மக்களால் இது ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்த நதியில் ஒவ்வொரு நாளும் மக்கள் பலரும் நீராடுகிறார்கள்.

10. கங்கை குளிப்பதற்கு மட்டும் புனிதாமானது அல்ல. அதன் சில பகுதிகளில் `ராஃப்டிங்’ (Rafting) விளையாட்டிற்கும் புகழ் பெற்றது.

11. இந்த நதி இதன் கிளை நதிகளுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷின் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.

 

 

20249 registered users
7808 resources