கழிவுப்பொருட்களின் அச்சுறுத்தல்

Resource Info

Basic Information

கழிவுப் பொருட்களைக் கையாளுதல் என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கழிவுப் பொருட்களை நிர்வகிப்பதில் ஒரு ஒட்டு மொத்த வழிகளைக் கடைப்பிடிக்காததும், இதன் காரணமாகத் தோன்றும் பாதிப்புகளின் பிரச்சினைகள் குறித்து போதுமான அறிவைப் பெற்றிராமல் இருப்பதும் சுற்றுச்சூழலுக்குச் சீர்படுத்த இயலாத பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. நாளைய குடிமக்களான குழந்தைகளுக்கு இந்த மாபெரும் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும். ஆசிரியர்கள் இந்தப் பிரச்சினையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய வழிகளையும், அதைப் பற்றி அவர்களைச் சிந்திக்கச் செய்யும் வழிகளையும் இந்தச் செயல்பாடு விளக்குகின்றது.

Duration: 
(All day)
முன்னுரை: 

கழிவுப் பொருட்களைக் கையாளுதல் என்பது எங்கும் பரவியுள்ள ஒரு பிரச்சினையாகக் காணப்படுகின்றது. கழிவுப் பொருட்களை நிர்வகிப்பதில் ஒரு ஒட்டு மொத்த வழிகளைக் கடைப்பிடிக்காததும், இதன் காரணமாகத் தோன்றும் பாதிப்புகளின் பிரச்சினைகள் குறித்து போதுமான அறிவைப் பெற்றிராமல் இருப்பதும் சுற்றுச்சூழலுக்குச் சீர்படுத்த இயலாத பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. நாளைய குடிமக்களான குழந்தைகளுக்கு இந்த மாபெரும் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், அவர்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க முடியும். ஆசிரியர்கள் இந்தப் பிரச்சினையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தக்கூடிய வழிகளையும், அதைப் பற்றி அவர்களைச் சிந்திக்கச் செய்யும் வழிகளையும் இந்தச் செயல்பாடு விளக்குகின்றது.

Objective: 

நோக்கம்:

1.      தாங்கள் உருவாக்கும் கழிவுப் பொருட்களை எவ்வாறு சிறப்பாக நிர்வகிப்பது என்பது குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வார்கள்.

2.      நமது சாலைகளையும் நகரங்களையும் தூய்மையாக வைக்க பாடுபடுபவர்கள் மீது மாணவர்கள் பரிவு காட்ட கற்றுக்கொள்வார்கள்.

3.      சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறித்து மாணவர்கள் மேலும் எச்சரிக்கையாக இருப்பார்கள்.

4.      ஆரோக்கியமற்ற சுற்றுச்சூழலின் அபாயங்கள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்வார்கள்.

Activity Steps: 

செயல்பாட்டுப் படிநிலைகள்:

நகராட்சித் தொழிலாளர்கள் தங்களது பணி நிலைமைகளுக்கு எதிராக காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவெடுத்துள்ளவாறு ஒரு சூழ்நிலையை உங்களது மாணவர்கள் கற்பனை செய்துபார்க்க முடியுமா? இதைக் கற்பனை செய்வதற்கு அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கவும். அது ஒரு மழை நாளாக இருக்கட்டும். நகரத்தை மழை மிக மோசமாகப் பாதித்துள்ளது, மேலும் வடிகால் அமைப்பு சீர்குலைந்து விட்டது. சாலைகளில், சாக்கடைகளில், கடைகளுக்குள் மற்றும் வீடுகளுக்குள் என அனைத்து இடங்களிலும் கழிவுநீர் பாய்ந்துகொண்டிருக்கின்றது. குப்பைத் தொட்டிகள் வழிந்து நிரம்பிக்கொண்டிருக்கின்றன, மேலும் சுற்றுப்புறம் முழுவதும் மோசமான துர்நாற்றம் பரவியுள்ளது. நிலைமையை மேலும் மோசமடையச் செய்யும் வகையில், அனைத்து நகராட்சித் தொழிலாளர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர். நமது அன்றாட வாழ்வில் அது என்ன விளைவினை ஏற்படுத்தக்கூடும்? மாணவர்கள் செய்தித்தாளுக்கு ஒரு அறிக்கை/கடிதம் எழுதலாம், ஒரு கட்டுரை எழுதலாம், அல்லது நிலைமையை சித்தரிக்கும் வகையில் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்பலாம்.

இந்தச் செயல்பாட்டின் வாயிலாக, நமக்கு அருகாமையிலுள்ள சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருப்பதற்கான நமது அக்கறையை அடிக்கடி நாம் குறைத்துக்கொள்கிறோம் என்ற உண்மை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும்.  இந்தச் செயல்முறையில் நாம் நமது கழிவுப் பொருட்களைத் தெருக்களிலோ அல்லது நமது பகுதிக்கு வெளியில் அமைந்துள்ள குப்பைத் தொட்டிகளிலோ நாம் போடுகிறோம். சில கழிவுப் பொருட்கள் மக்கும் தன்மையற்றது என்றாலும், பெரும்பான்மையான கழிவுப் பொருட்களை உரமாகப் பயன்படுத்த முடியும். இது குறைந்த செலவுடைய ஒரு செயல்முறை, இதன் மூலம் பொதுக் குப்பைத் தொட்டிகளில் கழிவுப் பொருட்கள் சேர்வது மற்றும் நகராட்சித் தொழிலாளர்கள் மீது சுமத்தப்படும் விரும்பத்தகாத வேலைச் சுமை ஆகிய இரண்டையுமே குறைக்க முடியும். நகராட்சித் தொழிலாளராக இருப்பது கடினமான ஒரு வேலையாகும், சாலைகளைச் சுத்தம் செய்தல், கழிவுப் பொருட்களைச் சேகரித்தல், சாக்கடைகள் மற்றும் பாதாளச் சாக்கடைகளைச் சுத்தம் செய்தல், இறந்த விலங்குகளின் சடலங்களை அகற்றுதல் போன்றவை உள்ளிட்ட பல வேலைகளை அவர்கள் மேற்கொள்கின்றனர். ஒரு துப்புரவாளர் பாதிக்கப்படக்கூடிய மிகப் பொதுவான நோய்களில் சில சுவாசப் பிரச்சினைகள், நுரையீரல் நோய்கள், காச நோய், சொறி சிரங்கு, மற்றும் இதர தோல் நோய்த் தொற்றுக்கள், காயங்களும் கீறல்களும், பூச்சிக்கடி மற்றும் எலிக் கடி, தசை வலி மற்றும் பூஞ்சைத் தொற்றுக்கள் போன்றவையாகும். கழிவுப் பொருட்கள் சேகரிப்பவராக அல்லது சாலைத் துப்புரவாளராக இருப்பவரின் சிரமங்கள் மற்றும் அபாயங்கள் குறித்து அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என அவர்களைக் கேட்பதன் மூலம் விவாதத்தை நீங்கள் தொடங்கலாம்.

இதற்கான தீர்வுகளாக அவர்கள் எதை நினைக்கிறார்கள்? இந்த வேலையை எவ்வாறு சுலபமானதாக்க முடியும்? எடுத்துக்காட்டாக, துப்புரவாளர்கள் ஒரே சமயத்தில் பல மணி நேரம் குனிந்த நிலையிலேயே பணிபுரியும் வகையில் துடைப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அழுகிய கழிவுப் பொருட்கள் அல்லது பூச்சிக்கொல்லிகளிடமிருந்து தங்களது கைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஒருபோதும் கையுறைகள் வழங்கப்படுவது இல்லை. அவர்கள் முகமூடி குறித்து முற்றிலும் கேள்விப்படாதவர்களாகவே உள்ளனர்.

இந்தத் தொழிலாளர்களின் துயரத்தைக் குறைப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும்?

அன்றாடக் கழிவுப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான, குறிப்பாக மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கான, உறுதியான வழிகளைத் திட்டமிடவும். மாணவர்களுக்கு தாங்களாகவே கலப்பு உரங்கள் தயாரிக்கவும், பள்ளிகளில் மக்கும் கழிவுப்  பொருட்கள் மற்றும் மக்காத கழிவுப் பொருட்களுக்குத் தனித்தனியாக இரண்டு குப்பைக் கூடைகளை வைப்பதற்கும் ஊக்கமளிக்கலாம். மக்கும் குப்பைக் கூடை காகிதம், துண்டுத் துணிகள், உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் எளிதில் சிதைவடையக்கூடிய இதர பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். தொடக்கத்தில், உரப் படுகைகளைத் தயாரிப்பதற்கு மாணவர்களுக்கு உதவி தேவைப்படக்கூடும்.

கூடுதல் பணியாக, எவ்வாறு கழிவுப் பொருட்கள் சிதைந்து இயற்கை உரமாகின்றது என்பதைக் கண்டுபிடிக்கும்படி மாணவர்களிடம் கேட்டுக்கொள்ளவும். இந்த முழுப் பயிற்சி வாயிலாக, வீட்டிலும் பள்ளியிலும் உள்ள தங்களது கழிவுப் பொருட்கள் எவ்வளவு குறைவாக இருந்தாலும் அவற்றை உரமாக்குவது தங்களைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

உங்களது உரத்தை நீங்களே உருவாக்குங்கள்

  1. நீளம் 2 அடி, அகலம் 2 அடி, உயரம் 4 அடி அளவுடைய ஒரு பெட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். அனைத்து மளிகைக் கடைகளிலும் இது போன்ற ஒரு பெட்டி எளிதாகக் கிடைக்கும்.
  2. அடிப்பகுதியில் சிறிது கூழாங்கற்களையும் குச்சிகளையும் போட்டு நிரப்பவும். கூழாங்கற்களின் மீது ஒரு அடுக்கு மணல் சேர்க்கவும்.
  3. சேகரிக்கப்பட்டுள்ள கழிவுப் பொருட்களை ஒன்பது அங்குல உயரம் வரை நிரப்பி, அதற்குள் சிறிது நீரை ஊற்றவும், அதன் மீது சிறிது சுண்ணாம்புத் தூளைத் தூவி, கழிவுப் பொருட்களின் மீது இரண்டு அங்குல உயரத்துக்கு மண் அடுக்கினைச் சேர்க்கவும். இந்தக் குவியலைத் தொடர்ந்து நனைத்துக் கொண்டிருக்கவும்.
  4. ஆறு மாத காலத்துக்குப் பிறகு, இந்தக் குவியலைப் பெட்டியிலிருந்து அகற்றவும்.
  5. அதை நன்கு கலக்கி, அதே அளவு கொண்ட மற்றொரு பெட்டியில் போடவும்.
  6. மீண்டும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு அதைத் தொடர்ந்து நனைத்துக்கொண்டிருக்கவும்.
  7. உங்களது உரம் தயாராகிவிட்டது. இந்த இயற்கை உரத்தை பள்ளித் தோட்டத்துக்கு எருவாகப் பயன்படுத்த முடியும், எஞ்சியுள்ள உரத்தை வணிக ரீதியாக சந்தைப்படுத்தலாம். மாணவர்கள் இந்த உரத்தை யாராவது சிறு விவசாயிக்கு பரிசாகக் கூடக் கொடுக்க முடியும்.

 

இந்தச் செயல்பாடு முதலில் டீச்சர் பிளஸ், பதிப்பு எண். 53, மார்ச்-ஏப்ரல் 1998-இல் வெளியிடப்பட்டது, இங்கு சில மாற்றங்களுடன் வெளியிடப்படுகின்றது.

 

18473 registered users
7227 resources